சென்னை, கிண்டியில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதியதாக 35 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் காரணமாக, ரூபாய் 28 ஆயிரத்து 508 கோடி முதலீட்டில் மொத்தம் 83 ஆயிரத்து 482 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது, ”தமிழ்நாடு பண்பாட்டின் முகவரியாக இருந்தது. அப்படிப்பட்ட தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த காலம், துயரமான கொரோனா காலம்.


தமிழ்நாடு அரசின் துணிச்சலான, துரிதமான செயல்பாடுகளினால் கொரோனாவை வென்ற காலமாக இதை மாற்றியிருக்கிறோம். கொரோனா தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனி அது வந்தால் அதை எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம்.




கொரோனா தாக்கத்தின்போது மருத்துவ நெருக்கடி மட்டுமின்றி, நிதி நெருக்கடியையும் நாம் எதிர்கொண்டோம். அப்போது, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு ரூபாய் 489.78 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. அரசு மேலே மக்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை இது காட்டுகிறது. இந்த நிதியை அளித்த அனைவருக்கும் எனது நன்றி. தமிழ்நாட்டு தொழில் முதலீட்டாளர்கள் மீது எனக்கு நம்பிக்கை இன்னும் அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு நிச்சயம் மாறப்போகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள் என்று தமிழக அரசு அழைப்பதைத் தாண்டி, தமிழ்நாட்டிற்கு மற்ற நிறுவனங்களையும் தொழில் தொடங்க தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். சவால்களை எதிர்கொள்ளும் எங்கள் அரசின் திறமை என்றைக்கும் நிலைத்து நீடித்து நிற்கும். உலகளவில் உற்பத்தித்துறை பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டின் உற்பத்தி துறை புத்துணர்வு பெற்று இயங்கத் தொடங்கியுள்ளது.


உலகையே அச்சுறுத்திய கொரோனா காலத்தில்கூட தமிழ்நாட்டில் அதிக முதலீடு ஈர்க்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதை நான் பார்க்கிறேன். கருணாநிதி முதல்வராக இருந்தகாலத்தில், நான் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது முதலீடுகள் மேற்கொள்ள இந்தியாவிலே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இப்போது, தெற்காசியாவிலே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதுதான் இந்த அரசின் லட்சியம். 2030ம் ஆண்டுக்குள் 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்கள் அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கி பயணிக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்க நான் உறுதியளிக்கிறேன்.  முதலீட்டாளர்கள் விரைவாக தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறை 2.0 இன்று தொடங்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.


இன்று கையெழுத்திடப்பட்ட 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ரூபாய் 17 ஆயிரத்து 141 கோடி முதலீட்டில் 55 ஆயிரத்து 54 நபர்களுக்கு தொழில் திட்டங்களை உருவாக்கிட கையெழுத்திடப்பட்டன. இன்றைய நிகழ்ச்சியில் ரூபாய் 4 ஆயிரத்து 250 கோடி முதலீட்டில் 21 ஆயிரத்து 630 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.