தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 7,987 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. 


தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்களிடம் உள்ள தயக்கத்தையும், தவறான நம்பிக்கைகளையும் போக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி திருவிழா தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த திருவிழா ஏப்ரல் 14 முதல் 16 வரை நடக்கிறது. தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 45 வயதிற்கு மேல் உள்ள 2.2 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.




 


முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயல்லாளர், "தமிழகம் முழுவதும் 54.85 லட்சம் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதில் 47.03லட்சம் கோவிசீல்ட் தடுப்பூசி மருந்து 7.82 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 40,99, 330 தடுப்பு ஊசிகள் இன்றைய தேதிவரை செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.  


மேலும், தினசரி தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் என கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.


கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.