அரசு நிலத்தில் குடியிருப்பு

ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கனவு சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நமக்கான சிறிய இடத்தில் வீடு கட்டி தங்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அப்படி சிறுக சிறுக சேர்த்த பணத்தில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டினால் திடீரென நிலம் உங்களுடையது இல்லை. அரசுக்கு சொந்தமான நிலம் என கூறினால் அந்த மக்களின் கனவு முழுவதும் கானல் நீராக மாறிவிடும். இந்த நிலையில் தான் தமிழக அரசு பட்டா வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் கட்டும் திட்டங்கள் செயல்படுத்த நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட சில இடங்களில், நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது தெரியாமல், பொதுமக்கள் பலர் மனைகளை வாங்கி, வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். 

நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடங்களில் வீடு கட்டி குடியிருப்பு

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள்  முதலமைச்சருக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில்,  அடிப்படையில், பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க, 'முதல்வரின் முன்னெடுப்பு திட்டம்' என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும், வீட்டுவசதி வாரியத்தின் அலுவலகங்களில், புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு 5952 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்ட பிரச்சனைகளான, வீட்டுவசதி வாரியத்தால் நிலம் கையகபடுத்தப்பட்ட நிலங்களில், குடியிருப்போருக்கு தடையின்மை சான்று கோருதல். பெயர் மாற்றம் செய்தல், பல இடங்களில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நில எடுப்பு நடவடிக்கை கைவிடப்பட்டு, நிலங்களை திரும்ப அளித்தல் போன்ற பல்வேறு விதமான கோரிக்கைகள் பொது மக்களால் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோவையில் மனுக்கள் மீது ஆய்வு

இதனைத் தொடர்ந்து, இரு நபர் குழு அமைத்து. நில எடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்பு ஏற்பட்ட பிரச்சனைகளை குறிப்பாக நில எடுப்பு நடவடிக்கையினை அறியாமல், மனைகளை வாங்கி, வீடுகள் கட்டிய பொதுமக்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர்இரு நபர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு கோரிக்கைகளை ஆய்வு செய்யும் பட்சத்தில், 5952 மனுக்கள் இருந்த காரணத்தினால், கோரிக்கைகளை தனித் தனியாக ஆய்வு செய்து, அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்க கோரப்பட்டது. இரு நபர் குழு தனது ஆய்வினை துரிதப்படுத்தி குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் காளப்பட்டி, வெள்ளக்கிணறு. கணபதி, விளாங்குறிச்சி ஆகிய இடங்களிலும், சென்னை மாவட்டத்தில் கே.கே நகர். இராமாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மேலும், மற்ற மாவட்டங்களிலும் வரப்பெற்ற மனுக்களை ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உரிமையாளர்களுக்கு விரைவில் பட்டா

இரு நபர் குழு குறிப்பாக, நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்கள். தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதையும், நில எடுப்பு செய்யப்பட்டதை அறியாமல் மனை வாங்கி கட்டியவர்கள் குறித்தும், மீதமுள்ள நிலங்கள் எவ்வளவு நிலங்கள் உரிமையாளர்களிடமும் / வாரிசுதாரர்களிடமும் வைத்துள்ளார்கள் என்பது குறித்தும், வருவாய்த் துறை மற்றும் வீட்டுவசதித் துறை ஆவணங்களை ஆய்வு செய்து, அரசிற்கு பரிந்துரை வழங்க இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. விரைவில், இரு நபர் குழுவின் விசாரணை அறிக்கையினை பெற்று. அரசிடம் ஒப்புதல் பெற்று, மக்களுடைய நீண்ட கால கோரிக்கையினை தீர்ப்பதற்கும், நில உரிமையாளர்களுக்கு பட்டா கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.