ரேஷன்கடைகளில் மானிய விலையில் உணவுப்பொருட்கள்
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது மலிவு விலையில் உணவுப்பொருட்களை வழங்கும் ரேஷன்கடைகள் ஆகும். தமிழகத்தில் 34 ஆயிரத்து 850 ரேஷன் கடைகள் மூலம் 2 கோடியே 27 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பச்சரிசி, கோதுமை, சக்கரை,பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த உணவுப்பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டைகள் கட்டாயமாகும். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமை தொகை போன்ற தமிழக அரசின் சலுகைகள் பெறுவதற்கும் ரேஷன் அட்டை முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது.
புதிதாக 1லட்சத்து 7ஆயிரம் பேர் விண்ணப்பம்
எனவே புதிதாக ரேஷன் அட்டை கேட்டு இணையதளம் மூலமாகவும், நேரடியாகவும் கடந்த ஆண்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு. வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்தநிலையில்புதிதாக ரேசன் அட்டை கோரி 1 லட்சத்து7ஆயிரத்து 910 விண்ணப்பங்கள் அளித்துள்ளதாகவும், இந்த விண்ணப்பதின் மீது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் உணவுப்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் விரைவில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனவும் கூறினர்.
தயார் நிலையில் 55ஆயிரம் ரேஷன் கார்டுகள்
தற்போது தகுதியான சுமார் 55,000 நபர்களுக்கு விரைவில் முழுமையாக ரேசன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுவிடும் எனவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரேஷன் கார்டுகள் அச்சிடுவதில் தாமதம் என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணி முழுமையாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.