ரேஷன் கடையில் கோதுமை
தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் வெளியாகியிருப்பதாக விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறுகையில்,
கோதுமை அளவை குறைத்த மத்திய அரசு
ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை கோதுமை ஒதுக்கீடு மாதம், 8,576 மெட்ரிக் டன் மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டினை உயர்த்திட ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பிப்ரவரி 2025 வரை 8,576 மெட்ரிக் டன்னிலிருந்து 17,100.38 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டது. இதன் காரணமாக பொது மக்களுக்குத் தங்குதடையின்றி நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
92 % பேருக்கு கோதுமை விநியோகம்
ஆனால் தற்போது மார்ச் 2025 முதல் கோதுமை ஒதுக்கீட்டைப் பழைய அளவிற்கே குறைத்து மாதம், 8,576 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 2025 மாதத்திற்கு 8722 மெட்ரிக் டன் கோதுமை மாவட்டங்களுக்கு நுகர்வின் அடிப்டையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் கோதுமையின் நுகர்வு சதவீதம் சராசரியாக 92% எனப் பதிவாகி உள்ளது. நவம்பர் மாதத்தில் 08.11.2025 வரை 63% (5,386 மெட்ரிக் டன்) கோதுமை நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யபட்டுள்ளது.
நவம்பர் 15ஆம் தேதி கோதுமை விநியோகம்
இருப்பு மற்றும் நுகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் நாளுக்குள் அனைத்துப்பொருள்களும் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனாலும் 15.11.2025-க்குள் 100% கோதுமையும் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வழக்கம் போல் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.