CM Stalin: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வஞ்சிப்பதாக, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சாடியுள்ளது.
அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்:
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்தது. ஆனாலும், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் திமுக அரசு அதனை அமல்படுத்தவில்லை. இதனை கண்டித்து அரசு ஊழியர்கள் பலமுறை போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், நிதி நிலை மோசமாக இருப்பதால் தான், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என அரசு தரப்பு கூறிவருகிறது. இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர், தமிழக அரசுக்கு எதிரான காட்டமான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
”உரிமைகளை பறித்த ஸ்டாலின்”
இதுதொடர்பான அறிக்கையில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘தேனாறும், பாலாறும் ஓடும்’ என்றவாறு தமிழக முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனையாக உள்ளது.
”ஊதியத்தை தவிர்ப்பாரா ஸ்டாலின்?”
தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடந்த பள்ளிக் கல்வித் துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதலமைச்சர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.