தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதியான திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை:
சனி, ஞாயி மற்றும் திங்கள் கிழமை தொடர் விடுமுறை வந்த நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரும் 21ம் தேதி( செவ்வாய்) அனைத்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையானது பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 4 நாட்கள் தொடர் விடுமுறையால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4 நாள் விடுமுறை:
அரசு அறிவித்துள்ள இந்த விடுமுறையால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை மாணவர்கள், இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ளவர்களின் நன்மைக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சனி, ஞாயி, திங்கள் மற்றும் தீபாவளி பண்டிகைக்ககாக அளிக்கப்பட்டுள்ள இந்த 4 நாட்கள் விடுமுறையால் ஒரு நாள் கூடுதலாக தங்களது குடும்பத்தினருடன் ஒவ்வொருவரும் நேரம் செலவழிக்க இயலும். சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வேலைக்காகவும், கல்விக்காகவும் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கியமான பண்டிகைகளில் மட்டுமே தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க தவறாமல் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், அரசு அளித்துள்ள இந்த விடுமுறை அவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களிலும் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டும் சுமார் 10 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கிச் செல்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும், குரோம்பேட்டை சாலையிலும் கடும் நெரிசல் காணப்படுகிறது. தனியார் பேருந்துகளிலும் வழக்கத்தை விட பன்மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.