முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொழில்துறைக்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதாக, தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு இன்று (டிச.7) தொடங்கியது. விழாவில் மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறி, பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி வீடியோ உரை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:


"வணக்கம். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நினைத்தேன். ஆனால் சூழல் காரணமாக வாய்ப்பு ஏற்படவில்லை. முதல்வர் ஸ்டாலினின் தலைமையின்கீழ் நாட்டிலேயே தொழில்துறைக்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது. இந்த முதலீட்டாளர் மாநாட்டின் முக்கிய நோக்கமான 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கு விரைவில் அடையப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.






தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கைகோத்து செயல்படும் ரிலையன்ஸ் 


ரிலையன்ஸ் பல்லாண்டுகளாக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெருமிதத்துடன் கைகோத்து செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில், 1,300 சில்லறை விற்பனை மையங்களைத் திறந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள 3.5 கோடி மக்களிடையே டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறோம்.


கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனத்துடனும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜனிலும் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.






நிலையான வளர்ச்சி


காலநிலை நெருக்கடியில் இருந்து பூமித் தாயைக் காப்பாற்றத் தேவையான நிலையான வளர்ச்சியை மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம்."


இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.