புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்தார். அதேபோல மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகளையும் அவர் திறந்து வைத்தார்.
கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று (செப்டம்பர் 5ஆம் தேதி) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் நடைபெறும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார்.
தாலிக்குத் தங்கம் திட்டம்
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தினைச் செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில் இணைய தளம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5ஆம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று, திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் பங்கேற்பு
அவருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
டெல்லியில் உள்ளதைப் போன்ற மாதிரிப் பள்ளிகள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற பள்ளிகள் சிலவற்றை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்துள்ளார். முன்னதாக இதற்கான அழைப்பிதழைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அர்விந்த் கேஜ்ரிவாலிடம் நேரில் வழங்கினார். இந்தத் திட்டத்துக்கு, அண்மையில் புதுமைப் பெண் திட்டம் (Puthumai Pen Thittam) என்று பெயர் சூட்டப்பட்டது.
3 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்
இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்தனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு, புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 உயர் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.