தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் வெளியிட்டப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்ததே அதிமுக அரசுதான்:


அப்போது, திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.


முதன்முதலாக காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்ததே அதிமுக அரசுதான். இவை எல்லாம் அதிமுக ஆட்சியின் முன்னோடி திட்டங்கள். கல்வியில் ஆர்வம் செலுத்தி வருகையை அதிகமாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்.


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இன்று போதைபொருள் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. கஞ்சா விற்பனை அனைத்து இடங்களிலும் நடக்கிறது. இது தொடர்பாக ஊடகத்தில், பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்றால் அதை அப்படி மறைத்து பேசுகிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு அதிமுக நிர்வாக கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.


சட்டம் ஒழுங்கு:


வெட்டி கொன்ற அனைவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதேபோல, விழுப்புரத்தில் இரண்டு போதை ஆசாமிகள். இருவரும் திமுகவை சேர்ந்தவர்கள். முதலமைச்சர் படம் பொறிக்கப்பட்ட சட்டையை போட்டு கொண்டு கடையில் ரகளை செய்கிறார்கள். 


சமாதானம் செய்ய முயற்சித்தவர்களை இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுவும் போதையில் இருந்து கொண்டு அரங்கேற்றப்பட்ட குற்றம். தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ. கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது.


கஞ்சாவை தடை செய்திருந்தால் இதுமாதிரியான கொலை சம்பவங்கள் நடந்திருக்காது. மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் இது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.


ஆனால், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி வேண்டுமென்றே தவறான தகவல்களை நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்" என்றார். 


முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அட்சய பாத்திர திட்டம் குறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்த திட்டத்திற்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியது குறித்து அப்போதைய ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்ததாக ஆய்வு செய்யப்பட்டது.


2018-19ஆம் ஆண்டு வரை ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது, திடீரென்று ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. 5 கோடி ரூபாயை எந்த காரணம் இல்லாமல் மறைமுகமாக மாற்றப்பட்டது ஜனநாயக மரபில் கிடையாது.


இது நல்ல திட்டமே இல்லை. 500க்கும் 1000 ரூபாய்க்கும் மானிய கோரிக்கையில் சட்டசபையில் ஒப்புதல் பெற்று வருகிறோம்.  ஆனால் 5 கோடி ரூபாயை யாருக்கும் சொல்லத் தேவையில்லாத கணக்கில் மாற்றி செலவழிக்கும் நிலை என்பது அரசியலமைப்புக்கு உட்பட்டது தானா?" என்றார்.