ஒரே சமயத்தில் 13 துறைகளுக்கு அமைச்சர்..! சுதந்திர போராட்ட தியாகி டூ மினிஸ்டர் - யார் இந்த விவி சுவாமிநாதன்?
தமிழக அரசியல் வரலாற்றிலே ஒரே சமயத்தில் 13 துறைகளை தன் வசம் வைத்திருந்த ஒரே அமைச்சர் விவி சுவாமிநாதன் ஆவார்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பல பெரும் ஆளுமைகள் இருந்தது நம்மில் பலருக்கும் தெரியாமலே இருந்துவிட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத சாதனையை செய்த பெருமைக்குரியவர் விவி சுவாமிநாதன்.
13 துறைகள்:
தமிழ்நாட்டில அரசியல் வரலாற்றிலே எந்தவொரு அரசியல்வாதியும் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 13 துறைகளை தன்வசம் வைத்திருந்தது இல்லை. ஆனால், விவி சுவாமிநாதன் அந்த அரிய சாதனையை படைத்துள்ளார். அதுவும் ஒரே சமயத்தில் இந்த துறைகளை தன்வசம் வைத்திருந்தார்.
யார் இந்த விவி சுவாமிநாதன்?
கும்பகோணம் அருகே வில்வராயநல்லூர் என்ற கிராமத்தில் 1927ம் ஆண்டு பிறந்தவர் இந்த விவி சுவாமிநாதன். தனது பதின்ம பருவத்திலே சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர். அப்போதே வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபாட்டுடன் காணப்பட்டார். பின்னாளில் பெரியார், அண்ணா பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தின் வழி செயல்படத் தொடங்கினார்.
சட்டப்படிப்பை முடித்து 1954ம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர், தன்னுடைய 37 வயதிலே சிதம்பரம் நகராட்சிக்கு தலைவராக தேர்வானார். இதனால், திமுக-வில் இவரது செல்வாக்கு மேலும் அதிகரித்தது. தம்பிக்கு கடிதம் என்ற தனது தொடரில் மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை விவி சுவாமிநாதனின் இந்த வெற்றி பற்றி எழுதியுள்ளார்.
திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர்:
ஒரு நகராட்சித் தலைவராக இவர் தனது நகராட்சியில் புகார் பெட்டி முறையை அறிமுகப்படுத்தினார். விவி சுவாமிநாதனின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பும், பாராட்டும் அப்போது கிடைத்தது. தமிழ்நாட்டிலே இந்த புகார் பெட்டி முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது இவரே ஆவார். இவரது சிறந்த செயல்பாடு காரணமாக அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் பக்தவச்சலம் சிதம்பரம் நகராட்சிக்கு சிறந்த நகராட்சிக்கான பரிசை வழங்கி பாராட்டினார்.
இவரது சிறந்த செயல்பாடு காரணமாக இவரை திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் என்று புகழாரம் சூட்டி அனைவரும் பாராட்டினர். இவரது செயல்பாட்டாலும், அறிவாற்றாலும் கவரப்பட்ட கருணாநிதி இவரை 1972ம் ஆண்டு ராஜ்யசபா எம்பி-யாக பரிந்துரை செய்து மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். பெரியார், அண்ணாவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த விவி சுவாமிநாதனுக்கு கருணாநிதி, எம்ஜிஆருடனும் நெருக்கமான உறவு இருந்தது.
13 துறைகள் என்னென்ன?
திமுக-வில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக-வைத் தொடங்கிய பிறகு, விவி சுவாமிநாதனும் அதிமுக-விற்குச் சென்றார். இவரது ராஜ்யசபா பதவிக்காலம் முடிந்தபோது எம்ஜிஆர் இவரை தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு அறிவுறுத்தினார். இதன்படி, புவனகிரி தொகுதியில் போட்டியிட்டு 1980 மற்றும் 1984ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவரது திறமையை பாராட்டி எம்ஜிஆரின் அமைச்சரவையில் தவிர்க்க முடியாத அமைச்சராகவும் இருந்தார். இவருக்கு 13 துறைகள் ஒதுக்கப்பட்டது. அதாவது,
1. மின்சாரம்
2.வணிகவரி
3. செய்தி விளம்பரம் மற்றும் திரை
4. இந்து சமய அறநிலையத்துறை
5.தகவல்
6.சுற்றுலா
7. கால்நடை
8.பத்திரப்பதிவு
9. வனத்துறை
10.திட்டமிடல்
11. தொல்லியல்
12.கைத்தறி, நெசவாளர்
13.வக்ஃப் வாரியம்
தமிழக அரசியல் வரலாற்றில் 13 துறைகளை தன் வசம் வைத்திருந்த ஒரே அமைச்சர் இவர் மட்டுமே ஆவார். அதுவும் ஒரே சமயத்தில் வைத்திருந்தார் என்பது இவரது திறமையின் அடையாளமாக கருதப்படுகிறது. எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு ஜானகி அம்மாளின் ஆட்சியிலும் இவர் அமைச்சராக இருந்தார்.
சாதனைகள் என்னென்ன?
ஆசியாவிலே முதல் கால்நடை பல்கலைக்கழகத்தை தொடங்கியது, டெல்லியில் உள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் பாரதியார் சிலையை நிறுவியது, பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஆறு கால பூஜையைத் தொடங்கியது, அனைத்து சமுதாயத்தினரும் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடும் உரிமையை கொண்டு வந்தது, தஞ்சை பெருவுடையார் கோயிலில் இருந்து திருடுபோன ராஜராஜ சோழன் மற்றும் சோழமகாதேவி சிலையை மீட்டுக்கொண்டு வந்தது, தமிழ்நாடு சிறுபான்மை கனிமவள நிறுவனம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதில் விவி சுவாமிநாதனின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும்.























