பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப்காரில் சென்றபோது ஏற்பட்ட மின்தடையால் ரோப்கார்  பாதியில் அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயில்  உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் உண்டியல் காணிக்கையில் முதல் இடம் பிடிக்கும் இக்கோயில் உலக புகழ்பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


இந்தநிலையில்,  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமிதரிசனம் செய்ய வருகை புரிந்தார். தமிழக அமைச்சர் என்பதால் அவருக்கு  ரோப்கார் மூலமாக கோயிலுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மலைக்கோவிலுக்கு  செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் நிதியமைச்சர் மேலே சென்றபோது திடீரென மின்சார தடை ஏற்பட்டது.


இதன் காரணமாக மேலே சென்ற ரோப்கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.‌ அந்தரத்தில் தொங்கிய ரோப்காரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும் ரோப்காரில் இருந்தனர். சுமார் இரண்டு நிமிட காத்திருப்புக்கு பிறகு மின்சாரம் மீண்டும் வந்தவுடன் ரோப்கார் வழக்கம்போல் இயக்கப்பட்டது.


தொடர்ந்து, மலைக்கோயிலுக்கு மேலே சென்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்த நிலையில், திருக்கோவில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. தரிசனத்திற்கு பிறகு ரோப்கார் வழியாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கீழே இறங்கினார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மலைக்கோவிலுக்கு செல்லும் போது மின்தடை காரணமாக ரோப்கார் பெட்டி பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் அங்கு சம்பவம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 


லிப்ட்டில் மாட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்: 


முன்னதாக, கடந்த மாதம் நவம்பர் 29 ம் தேதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்றிருந்தார். மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றனர்.


அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துமனையில் உள்ள மின்தூக்கியில் செல்லும்போது, மின் தூக்கி பாதி வழியில் நின்றது. செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பின்னர் லிப்ட் ஆப்ரேட்டர் உதவியுடன் லிப்டின் ஆபத்துக் கால கதவின் வழியே வெளியேறினர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. 


மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டதாக கூறப்பட்டது.


இது தொடர்பாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் அமைச்சர் விசாரித்த போது,  இது போன்று அடிக்கடி மின்தூக்கி பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் டி.சுசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.