தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
அதில், “தற்போது பெட்ரோல்,டீசல் மற்றும் சமையில் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் ஏறியுள்ளது. இவை அனைத்தையும் எதிர்த்து தமிழ்நாடு பாஜக முதலில் போராட்டம் நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் எந்தவிதமான மின் உற்பத்தி திட்டத்தையும் தமிழ்நாடு மின்சார வாரியம் முன் எடுக்கவில்லை.
ஆனால் நாங்கள் அடுத்த 5 வருடங்களில் 6620 மெகாவாட் அளவிற்கு கூடுதல் திறன் கொண்ட மின்சார உற்பத்தியை மேற்கொள்ள உள்ளோம். அதேபோல் கடந்த 2006-11ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டங்களை கடந்த அரசு முடிக்கவில்லை. அதற்காக ஏற்பட்ட கூடுதல் வட்டி செலவு மட்டும் 12,600 கோடி ரூபாய் அமைந்தது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
உயர்த்தப்பட்ட மின் கட்டணம்:
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த 18ஆம் தேதி வெளியானது. அதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 27.50 ரூபாய் மின் கட்டணம் உயர்வதாகவும், 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2 மாதங்களுக்கு 147.50 ரூபாய் கட்டணம் உயர்த்த பரிசீலிக்கப்படுவதாகவும், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 298.50 கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், 42 விழுக்காடு வீடு மற்றும் குடிசைகளுக்கான மொத்தக் கட்டணத்தில் மாற்றமில்லை என்றும் விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். ரயில்வே மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு 65 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம்:
கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் 12,647 கோடி கடன் உயர்ந்துள்ள நிலையில், மூன்றில் இரு பங்கு தனியாரிடம் நிலக்கரி வாங்க வேண்டி உள்ளதாகவும், வெளிநாட்டு நிலக்கரியின் கட்டண உயர்வால் மின்சாரத் துறையில் கடன் அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்ததாகவும் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்றும் மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்கும் நிலைக்கு தமிழ்நாடு மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்