TN DGP Abhay Kumar Singh IPS: தமிழ்நாடு டிஜிபியாக பொறுப்பு வகித்த சங்கர் ஜிவால் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வெங்கட்ராமன், அவருக்கு பதிலாக அபய குமார் சிங் ஐபிஎஸ், பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த அபய் குமார் சிங் ஜ.பி.எஸ்?
அபய் குமார் சிங் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். 1992 ஆம் ஆண்டின், ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியாக பதவி பெற்றார். தமிழ்நாட்டு காவல்துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். குறிப்பாக தென்மண்டல ஐஜி, சென்னை மாநகரின் கூடுதல் காவல் ஆணையர், திருநெல்வேலி மாநகரின் காவல் ஆணையர், ராமநாதபுரத்தில் துணை ஐ.ஜி, மதுரை மாவட்டத்தின் எஸ்.பி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வந்துள்ளார் .
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக பணியாற்றி வந்த பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற்றது தொடர்ந்து அவரது பதவிக்கு அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டார். ஆயுதப்படையில் ஏ.டி.ஜி.பியாகவும், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.,யாகவும் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு டி.ஜி.பி அந்தஸ்திற்கு, அபய் குமார் சிங் பதவி உயர்வு பெற்றார்.
இந்தநிலையில் தான் தமிழக டி.ஜி.பியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டி.ஜி.பி., ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் 15 நாட்களுக்கு மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபி பதவி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கும் நிலையில், பொறுப்பு டி.ஜி.பி.யாக அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.