மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று வெளியிட்டார். புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி, "திமுக இளைஞரணியை உருவாக்கியபோது, கட்சித்தலைவருடன் தோளோடு தோள் கொடுத்தவர் திருச்சி சிவா.


சிவாவிற்கு பல முகங்கள் உண்டு. இளைஞரணியை பொறுத்தவரை பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர் திருச்சி சிவா. 45 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் திருநங்கைகளுக்காக தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து சாதனை படைத்தவர்.


"பாசிசவாதிகளை கதறவிடுபவர் பிரகாஷ்ராஜ்"


திராவிட இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். திருச்சி சிவா போன்றோர் இருக்கும்வரை திராவிட இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது. பாசிசவாதிகளை சமூக வலைதளங்களில் கதறவிடுபவர் பிரகாஷ்ராஜ்" என்றார். 


தொடர்ந்து பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், "என்னுடைய குரல் அரசியல் குரல் இல்லை. ஒரு கலைஞனின் குரல். ஆனால் பேசினால் அரசியலாகி விடுகிறது. கொஞ்சம் கடினம்தான். கலைஞர் இருக்கும் வரை என்னை போன்ற நபர்கள் பேச வேண்டியத் தேவை இல்லை.


பேருந்தில் திருடர்கள் ஜாக்கிரதை என போர்டு வைப்போம். அது திருடர்களுக்கு வலிக்கும். அதேபோல, என்னுடைய மொழி, அடையாளம், தனித்துவம், மாநிலத்தை திருடாத என போர்டு போடுகிறோம். ஆனால், திருடர்களுக்கு வலிக்கிறது. பரவாயில்லை வலிக்கட்டும்.


"வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள்"


நம்மிடம் ஒரு DEPUTY CM உள்ளார். சமத்துவம் குறித்து பேசுகிறார். இன்னொரு DEPUTY CM உள்ளார். அவர் சக்காரத்தில் ஒன்று பேசுகிறார். நாங்கள் சமத்துவத்துடன் உள்ளோம்" என்றார்.


நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "நான் மிசா காலத்தில், காவல்துறை பாதுகாப்பில் மாநில கல்லூரியில் தேர்வு எழுதியது போல, திருச்சியில் காவல்துறை பாதுகாப்பில் தேர்வு எழுதினார் சிவா. மிசா காலத்தில் மாநில கட்சிகள் இயங்கத் தடை என்ற போது, அதிமுகவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றினர், 


பவள விழா கண்ட நம் இயக்கம், 75 ஆண்டு காலமாக நாம் கட்சி பெயர் மாறவில்லை, கொடி மாறவில்லை, கொள்கை மாறவில்லை, கோட்பாடு மாறவில்லை. பாஜகவினர் உண்மையை பொய்யை வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் அதை உடைத்து எறிவதற்கு திருச்சி சிவா போன்ற பல சிவாக்கள் உருவாக வேண்டும்" என்றார்.