தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதியதாக பதவியேற்றுக் கொண்டுள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில இன்று ஒரே நாள் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 36 ஆயிரத்து 184 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியிருப்பது  மக்கள் மத்தியில் மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.




இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரத்து 262 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 30 ஆயிரத்து 271 நபர்கள் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 நபர்கள் ஆகும். இன்று தொற்று உறுதியானவர்களில் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 913 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிககப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவோர் உள்பட சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 782 ஆகும்.




தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 166 ஆகும். பெண்கள் 7 லட்சத்து 16 ஆயிரத்து 784 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 20 ஆயிரத்து 425 நபர்கள் ஆவார்கள். பெண்கள் 15 ஆயிரத்து 759 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 25 ஆயிரத்து 368 ஆகும். இதனால், மாநிலம் முழுவதும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்கள் ஆவார்கள்.


தமிழகத்தில் நேற்று 397 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 467 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 168 பேர் தனியார் மருத்துவமனையிலும், 299 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.  தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 467 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 214 நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் மட்டும் 128 நபர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.