தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக தினசரி தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்தச் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 475 பேர் உயிரிழந்துள்ளனர். 


மாவட்டங்களை பொறுத்தவரை முதல் முறையாக சென்னையை பின்னுக்கு தள்ளி அதிக பாதிப்பு கொண்ட மாவட்டமாக கோவை இடம்பிடித்துள்ளது. கோவையில் இன்று ஒரேநாளில் 4268 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 3561 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. நேற்று வரை சென்னையில் 20க்கும் மேல் இருந்த தொற்று உறுதியாகும் சதவிகிதம் இன்று 20க்கும் கீழே குறைந்துள்ளது.




சென்னை, கோவை தவிர திருவள்ளுர், செங்கல்பட்டு, ஈரோடு,கன்னியாகுமரி, மதுரை, திருப்பூர்,திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் பட்டியலில் அதிகபட்சமாக சென்னை உள்ளது. சென்னையில் ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று 98 பேர் உயிரிழந்துள்ளனர். 


அதேபோல் இன்று ஒரே நாளில் தொற்றிலிருந்து 29717 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16,13,221 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 19,45,260 பேர் கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21,815 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.