தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்துவரும் கொரோனா தொற்றின் அளவானது, இன்று 20 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. இன்று, ஒரு லட்சத்துக்கு 60 ஆயிரத்து 385 பேரிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 19ஆயிரத்து 448 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. முந்தைய சில நாள்களைப் போலவே, குணமானவர்களின் எண்ணிக்கை தொற்றுப்பதிவைவிட அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர். தற்போது, மாநில அளவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றியதால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தலிலும் மருத்துவமனை சிகிச்சையிலும் இருக்கின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அன்றாட தொற்று பாதிப்பானது, இன்று அதிக அளவாக கோவை மாவட்டத்தில் 2,564 பேருக்கும் ஈரோட்டில் 1,646 பேருக்கும் சென்னையில் 1,530 பேருக்கும் திருப்பூரில் 1,027 பேருக்கும் கண்டறியப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 997 பேருக்கும் செங்கல்பட்டில் 837 பேருக்கும் தஞ்சையில் 831 பேருக்கும் நாமக்கல்லில் 597 பேருக்கும் திருச்சியில் 548 பேருக்கும் நீலகிரியில் 503 பேருக்கும் நாகையில் 492 பேருக்கும் இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கொரோனா தொற்றுடன் சேர்த்து மிகை இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற கூடுதல் பாதிப்பு உள்ளவர்கள் 268 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மற்ற 83 பேருக்கு அப்படியான பாதிப்புகள் ஏதும் இல்லை. உயிரிழந்தவர்களில் 29 வயதுடைய சென்னையைச் சேர்ந்த ஒருவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த இன்னொருவரும் அடங்குவர். சென்னை இளைஞருக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதியன்று தொற்று உறுதியானது. அதையடுத்து 5 நாள்களுக்குப் பிறகு ஜூன் முதல் தேதியன்று இரவு 7.25 மணிக்கு அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐந்து நாள்கள் சிகிச்சைப் பின்னர் நேற்று முன் தினம் இரவு அவர் உயிரிழந்தார். திருவண்ணாமலை இளைஞருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி தொற்று உறுதியானது. அதன் பிறகு மூன்று நாள்களுக்குப் பிறகு அதாவது 22-ஆம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த இரண்டு நாள்களில் அவர் உயிரிழந்தார். இறந்தவர்களில் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த 30 வயது பெண், கொரோனா தொற்றியதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்தார். ஒரு நாள் காய்ச்சலும், அதையடுத்த மூன்று நாள்களுக்கு இருமலுமாக அவதிப்பட்ட அவருக்கு, அடுத்த இரண்டு வாரங்கள் கீல்வாதம் எனப்படும் தசை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.