தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்டு வரும் ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு பணிகள் காரணமாக, கடந்த மாதம் 36 ஆயிரம் என்ற அளவில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 17 ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் 16 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 8 ஆயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,223 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் கோவை மாவட்டத்தில் இன்று மட்டும் 2 ஆயிரத்து 236 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக கொரோனாவால் 5 லட்சத்து 22 ஆயிரத்து 52 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 13 லட்சத்து 53 ஆயிரத்து 435 ஆக பதிவாகி உள்ளது. பெண்கள் 9 லட்சத்து 55 ஆயிரத்து 365 நபர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 38 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 32 ஆயிரத்து 49 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக 400க்கு மேல் பதிவாகி வந்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 358 ஆக குறைந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 135 பேரும், அரசு மருத்துவமனையில் 223 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 658 ஆக பதிவாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.