Tamil Nadu Coronavirus LIVE News :கோயம்பேடு சந்தையில் 8,239 நபர்களுக்கு தடுப்பூசி

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 10 Jun 2021 08:59 PM
கோயம்பேடு சந்தையில் 8,239 நபர்களுக்கு தடுப்பூசி

கொரோனா பரவலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கடந்த வாரம் சென்னை மாநகர ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் நேற்று மட்டும் 703 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை கோயம்பேடு சந்தையில் 8 ஆயிரத்து 239 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 17 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 813 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 1,223 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் தொடர்ந்து தமிழகத்தில் அதிக பாதிப்பாக இன்றும் 2 ஆயிரத்து 236 ஆக பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 32 ஆயிரத்து 49 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 358 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் 28 ஆயிரத்து 518 நபர்களாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 45 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் புதியதாக 14,424 நபர்களுக்கு கொரோனா

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில், மாநிலத்தில் புதியதாக 14 ஆயிரத்து 424 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 194 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 

டெல்லியில் இன்று 305 நபர்களுக்கு கொரோனா

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் டெல்லியில் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 75 ஆயிரத்து 133 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 305 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு வீதம் 0.41 சதவீமாக பதிவாகி உள்ளது. இன்று ஒரே நாளில் 44 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 560 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி, டெல்லியில் 4 ஆயிரத்து 212 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பு விதிகள்: யாரும் சந்திக்க வர வேண்டாம் - முதல்வர் கடிதம்

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதாலும், அரசுமுறைப் பயணம் என்பதாலும் நிர்வாகிகள், கட்சியினர் யாரும் சந்திக்க வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரூபாய் 30 லட்சம் மிச்சம் - தமிழக அரசு

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கான விடுதிக்கட்டணம் மற்றும் உணவுக்கட்டணங்கள் ரூபாய் 30 லட்சம் வரை மிச்சப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை

தமிழ் நாட்டில் தளர்வுகளுன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வார காலம்  (ஜூன் 21 வரை) நீட்டிக்க உயர் அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்த, முறையான அறிவிப்புகள் நாளை  வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.   

தடுப்பூசிக்கு பிந்தைய பக்கவிளைவுகள் இந்தியாவில் அரிதானது- எய்ம்ஸ் மருத்துவர்

டாக்டர் குலேரியா: தடுப்பூசியால் ரத்தம் உறைவது அல்லது த்ராம்போசைட்டோபீனியா என்று அழைக்கப்படும் இந்த பக்கவிளைவு, இந்தியாவில் மிகவும் அரிதானது, ஐரோப்பாவைவிட குறைந்த அளவிலேயே ஏற்படும். ஏனெனில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்களுடனும் ஒப்பிடுகையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்திய மக்களிடையே ரத்தம் உறையும் பிரச்சினை குறைவாக இருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது. 


எனவே இதனால் பயப்படத் தேவையில்லை. முன்கூட்டியே இந்தப் பிரச்சனையைக் கண்டறிந்துவிட்டால் இதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம் என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா விளக்கமளித்தார்


 

Bihar Covid-19 Death Reconciliation: கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் கொரோனாவுக்கு 6,148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 


நேற்று, பீகார் மாநில அரசு, மறுஆய்வு செய்யப்பட்ட  கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிட்டது. முந்தைய நாட்களில், சேர்க்கப்படாத 3951 இறப்புகள் நேற்றைய கணக்கில் சேர்க்கப்பட்டன. இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை  9,400 ஆக அதிகரித்துள்ளது.  இதன்காரணமாக, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 6,148 ஆக உயர்ந்துள்ளது. 


ஏற்கனவே, இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கைகள் குறைத்து மதிப்பிடப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



        

மருத்துவ பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படும் - அமைச்சர் மா சுப்பிரமணியன்

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து மக்களுக்கு சேவைபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தரமான உணவு மற்றும் உயர்தர விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் - டாக்டர் க.குழந்தைசாமி

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கலைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் தமிழ் நாடு அரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குனரும் கோவிட்-19 மாநில பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார். பாலூட்டும் தாய்மார்கள்கூட இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

கொரோனா பாதித்தவர்களில் 4.00% பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்

இந்தியாவில் மொத்த கொரோனா நோயாளிகள் (ஜூன் 10,2021 வரையான நிலவரம்)


94.77 % பேர் குணமடைந்துள்ளனர்(2,76,55,493)
4.00% பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் (11,67,952)
1.19% பேர் இறந்துள்ளனர் (3,59,676)


சென்னையில் ஊரடங்கு அமலாக்க குழு எண்ணிக்கை அதிகரிர்ப்பு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகள் மற்றும் நெறிமுறைகளை முறைப்படுத்துவதற்கான மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது.   

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என்றும், சென்னையில் 20,000க்கும் குறைவான தடுப்பூசிகள் உள்ளன என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.         

தமிழ்நாட்டில் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது

நாடு முழுவதும், 18-44 வயது பிரிவு பயனாளிகளில்,  3,38,08,845 பேர் முதல் டோசையும், 4,05,114 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை பெற்றுள்ளனர்.


பிகார், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. ஜூன் 9ம் தேதி மாநிலம் முழுவதும், வெறும் 32,626 தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே நிர்வகிக்கப்பட்டன. இதில், சென்னையில் மட்டும் 20,645 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. 


தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, பரமக்குடி, பெரம்பலூர், ராமநாதபுரம் போன்ற பல பகுதிகளில் ஜூன் 7ம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பூசிகள் போடப்படவில்லை. 

அனைத்து மாவட்டங்களிலும் சரிந்த கொரோனா தொற்று!

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அன்றாட புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. உதாரணமாக,மதுரை மாவட்டத்தில், 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 1255 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.   




 


நேற்று குணமடைந்தவர்களில் 53 சதவீதம் பேர் 8 மாவட்டங்களில் இருக்கின்றனர். மாநிலத்திலேயே கோயம்பத்தூர் மாவட்டத்தில் தான் தினசரி குணமடைதல்கள் எண்ணிக்கை (4992) அதிகமாக உள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3281பேரும் திருப்பூர் மாவட்டத்தில் 1511 நோயாளிகளும் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் அரசு உயர் அதிகாரிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 


இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. 

Background

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 17,321 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த 40 நாட்களில் இல்லாத மிகக்குறைவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை யாகும் .  தற்போது, மாநிலம் முழுவதும் 2,04,258 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 31,253 பேர் குணமடைந்தனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.