TN Corona LIVE Updates : தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது
மே 24 முதல் ஒருவார காலத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் வரும் திங்கள் முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று மற்றும் நாளை மட்டும் அனைத்து கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும், அரசின் உத்தரவு வரும் மதுபானக் கடைகள் மூடப்பட்டுதான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இன்று மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35 ஆயிரத்து 873 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 6 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 5 ஆயிரத்து 559 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 671 ஆக பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 74 ஆயிரத்து 61 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 7 லட்சத்து 32 ஆயிரத்து 762 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 19 ஆயிரத்து 895 நபர்களும், பெண்கள் 15 ஆயிரத்து 978 நபர்களும் அடங்குவர். மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு குணம் அடைந்து இன்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 776 ஆகும். இதனால், மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 2 ஆயிரத்து 537 நபர்கள் ஆவார்கள். கொரோனா வைரசினால் நேற்று 467 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று கொரோனா தொற்றினால் தமிழ்நாடு முழுவதும் 448 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 169 பேர் தனியார் மருத்துவமனையிலும், 279 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் 86 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் மட்டும் உயிரிந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 6 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 125 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர். தமிழகத்தில் கொரோனா பரவலின் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் சென்ற நிலையில், இன்று ஆறுதல் அளிக்கும் விதமாக சற்றே குறைந்துள்ளது. இருப்பினும், தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. புதியதாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி விதிக்கப்பட்டுள்ளதால், மனிதர்கள் வெளியில் நடமாடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கும் என்றும், இதனால் கொரோனா பரவலை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று சுகாதாரத்துறையினரும், ஆய்வாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தினால், எந்த தளர்வுகளும் இல்லாத நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் ஊரடங்கை முறையாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, பிற மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைப் போலவே, அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் இன்று ஒரே நாளில் புதியதாக 28 ஆயிரத்து 514 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 176 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கேரள முழுவதும் 2 லட்சத்து 89 ஆயிரத்து 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாநிலங்களில் நாட்டின் தலைநகரான டெல்லியும் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி அரசு ஊரடங்கு, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்த மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி தட்டுப்பாடு குறித்தும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்த வேண்டும். என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் சூரி இன்று மதுரையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அவருடன் அவரது மனைவியும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக வரும் 24-ந் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொரோனா பரவல் தினசரி 35 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. உயிரிழப்பும் தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ- பதிவு தேவையில்லை.
உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பதிவுடன் அனுமதிக்கப்படும்.
மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்
பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்
உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
ஏ.ட்டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.
வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
பெருந்தொற்று பரவலைக் கட்டுபடுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24ம் தேதி முதல் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சட்டப்பேரவை அனைத்துக் கட்சி உறுப்பினர் குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட தகவலில், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 420க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். நாட்டிலே அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தரபிரதேசத்தில் 41 மருத்துவர்களும், குஜராத்தில் 31 மருத்துவர்களும், தெலுங்கானாவில் 20 மருத்துவர்களும், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் 16 மருத்துவர்களும், மகாராஷ்ட்ராவில் 15 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இந்த மாத இறுதியில் கொரோனா பரவல் உச்ச நிலையை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இன்று மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாளை அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, மேலும் இரண்டு வாரங்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டிக்க மருத்துவ குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர். இது புதிய நோயாளிகளின் ( 2,57,299) எண்ணிக்கையைவிட அதிகம். தேசியளவில் குணமடையும் விகிதம் 87.76ஆக அதிகரித்துள்ளது. 29 லட்சத்துக்கும் அதிகமானோர் (29,23,400) கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது,மொத்த பாதிப்பில் 11.12 சதவிகிதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 20,61,683 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது, அதற்கு முந்தைய 6 நாட்களை விட அதிகமாகும் . இருப்பினும், கடந்த 6 நாட்களுடன் ஒப்பிடுகையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
இந்தியாவின் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படும் விகிதம் ( positivity rate) 12.5 ஆக சரிந்துள்ளது.
தமிழகத்தில் 18 முதல் 44 வரையிலான 48,620 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போடப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் எனப்படும் மியூகார்மைகோஸிஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆம்ஃபோடெரிசின்-பி மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " பாரத் சீரம்ஸ் மற்றும் தடுப்பூசி நிறுவனம், பிடிஆர் பார்மாடிக்கல்ஸ் நிறுவனம், சன் பார்மா நிறுவனம், சிப்லா, லைப் கேர் இன்னோவேஷன், மிலன் லேப்ஸ் (இறக்குமதியாளர்) ஆகிய ஐந்து நிறுவனங்கள் (ஒரு இறக்குமதியாளர்) ஆம்போடெரிசின்-பி மருந்தை தயாரித்து வருகின்றன.
இது தவிர, இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் 3,63,000 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி இறக்குமதி செய்யப்படும். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியோடு சேர்த்து 5,26,752 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி கிடைக்கும்.
அடுத்த மாதம் 3,15,000 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி இறக்குமதி செய்யப்படும். ஆகையால் உள்நாட்டு உற்பத்தியோடு சேர்த்து அடுத்த மாதம் 5,70,114 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி கிடைக்கும்.
மேலும், நாட்கோ பார்மாடிக்கல்ஸ், ஐதராபாத், அலம்பிக் பார்மாடிக்கல்ஸ், வதோதரா, குஃபிக் பயோசயின்ஸ் லிமிடெட், குஜராத், எம்கியூர் பார்மாடிக்கல்ஸ், புனே, லைகா, குஜராத் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கு இந்த மருந்தை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
கொரோனா முதல் அலையின் போது, காய்ச்சல் மற்றும் இருமல் பொதுவான அறிகுறிகளாக இருந்தன. இரண்டாவது அலையின் போது தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், கண் சிவப்பமாக மாறுதல், தலைவலி, உடல்வலி, தடிப்பு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.
3 மற்றும் நான்கு நாட்களுக்கு பிறகே நோயாளிக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. அதன்பின் நோயாளி பரிசோதனைக்கு செல்கிறார். முடிவுகள் தெரியவும் நேரம் ஆகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்படும்போது, பாதிப்பு ஏற்பட்டு 5 முதல் 6 நாட்கள் ஆகிறது. அதற்குள் நுரையீரல் ஏற்கனவே பாதித்து விடுகிறது.
இதனால், 45 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கும் கொரோனா இறப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது எப்படி?
மூச்சுப் பயிற்சி பரிசோதனையை மேற்கொள்ள முடியும். மூச்சை இழுத்து பிடித்து வைத்திருக்கும் நேரம் குறைந்தால், அது ஆரம்ப எச்சரிக்கை அறிகுறி எனக் கருதி கொள்ளுங்கள். உடனடியாக, மருத்துவரை ஆலோசிக்க தொடங்குங்கள். தனியார் மற்றும் அரசு கொரோனா சோதனை ஆய்வுக் கூடகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள். பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
நேற்றைய இறப்பு எண்ணிக்கை அறிவிப்பில், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற எந்தவித இணைநோய்கள் இல்லாத 128 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில், 46 பேர் 45 வயதுக்குட்பட்ட பிரிவினர் என்பது மற்றொரு துயர செய்தியாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 467 பேர் பலியாகியுள்ளனர். இதில், அதிகபட்சமாக சென்னையில் 109 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கொரோனா இரண்டாம அலையில் கருப்பு பூஞ்சை போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் நாடு முழுவதும் அதிகருத்து காணப்படுகின்றன. இதனையடுத்து, கருப்பு பூஞ்சை நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
ஸ்டீராய்டு சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள், இணை நோய்த்தன்மை உடையவர்கள் (நீரிழிவு உள்ளவர்களுக்கு கிளைமெகிக் கட்டுப்பாடு உருவக்கப்பட வேண்டும்) ஆகிய நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களின் மேலாண்மையில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Background
Tamil nadu Corona News Live Updates: தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 73 லட்சத்தைக் கடந்துள்ளது (73,25,078).
இவர்களில் 53,67,365 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். 19,57,713 பேர் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டவர்கள். மே 15-21 வரை தமிழகத்தில் 2 லட்சத்து 23 ஆயிரம் 556 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. உதாரணமாக, ஏப்ரல் 10- 16 ஆகிய வார நாட்களில் 9 லட்சத்து 56 ஆயிரம் 368 பேர் தடுப்பூசி டோஸ்கள் எடுத்துக் கொண்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -