TN Corona LIVE Updates : தமிழ்நாட்டில் நாளை முதல் 24-ஆம் தேதி முழு ஊரடங்கு..
TN Corona Cases LIVE Updates: தமிழ்நாட்டிற்கு இதுவரை 74,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரச தெரிவித்தது. இதில் 3.94% வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வரும் 11-ஆம் தேதி முதல் 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுவனம் துவங்குகிறது. அதனை 70 டன்னாக உயர்த்த அரசு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் (Unified command centre) தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டளை மையம் கொரோனா ’வார் ரூம்’ ஆகச் செயல்படும். தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ். இந்த மையத்தின் வழிகாட்டுதல் இயக்குநராகவும், நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இதன் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆக்சிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும். எந்த விதமான சூழலிலும் ஆக்சிஜன் வீண்போகக்கூடாது. ரெம்டெசிவிர் விற்பனையைக் கண்காணிப்பதோடு, கள்ளச்சந்தை விற்பனையை தவிர்க்கவேண்டும். மருந்துகள், உணவு, சிகிச்சை கண்காணிக்கப்பட வேண்டும்
மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். 8 மாதங்களாக கருவுற்றிருந்த நிலையிலும், கொரோனா அச்சத்தை ஒதுக்கி மக்களுக்கு சேவையாற்றிய ஈகியர் அவர். அவருக்கு எனது வீரவணக்கம்!
8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கொரோனா தடுப்புப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிக்கிறது
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,444 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 4,092 பேர் கோவிட் நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 37 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுஷ் 64 என்ற ஆயுர்வேத மருந்து மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை விநியோகிப்பதற்கான மாபெரும் இயக்கத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
ஆயுஷ்-64 என்றால் என்ன?
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஆயுர்வேத ஆராய்ச்சிக்கான உயரிய அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழு, ஆயுஷ்-64 என்ற மூலிகை கலவைகளாலான மருந்தை உருவாக்கியுள்ளது. சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்த கலவை மிகச் சிறந்த நிவாரணியாகும்.
இந்தியா முழுவதும் ஆறு மருத்துவ ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கொவிட்-19 மேலாண்மையில் ஆயுஷ்- 64 மருந்து மிகச்சிறந்த பலனை வழங்குவது தெரியவந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கு எதிராக இது அறிவியல் பூர்வமாக சோதனை செய்யப்பட்டுள்ளதா?
நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ சோதனைகளில், அறிகுறியற்ற மற்றும் லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்று உள்ள நோயாளிகளின் சிகிச்சையில் ஆயுஷ்-64 மருந்து மிகச்சிறந்த பலனைத் தருவது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுஷ்-64 மருந்தை யார் எடுத்துக் கொள்ளலாம்?
கோவிட்-19 தொற்றின் அனைத்து நிலைகளிலும், நோயாளிகள் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம். காய்ச்சல், அசதி, உடல் வலி, மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற லேசானது முதல் மிதமான கொவிட்-19 தொற்று பாதிப்பு உள்ளவர்களும், அறிகுறியற்ற நோயாளிகளும் இந்த மருந்தை, தொற்று உறுதி செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் எடுத்துக் கொள்ளத் தொடங்கலாம்.
ஆயுஷ்-64 மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?
ஒரு சிலருக்கு , வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனினும் இதற்கு எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள தேவையில்லை
லேசான தொற்று உள்ளவர்கள் ஆயுஷ்-64 மருந்தை மட்டுமே எடுத்துக்கொள்ளலாமா?
ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் படி லேசான தொற்று உள்ளவர்கள் உரிய நெறிமுறை வசதிகளை உறுதி செய்துகொண்டு இந்த மருந்தை மட்டுமே பயன்படுத்தலாம். எனினும் வீட்டு தனிமையில் உள்ள லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பிற மருத்துவ சிகிச்சைகளுடன் ஆயுஷ்-64 மருந்தையும எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இணை நோய்கள் உள்ள கொவிட்-19 நோயாளி, ஆயுஷ்-64 மருந்தை எடுத்துக் கொள்ளலாமா?
ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தால், அவர்கள், ஆயுஷ்-64 மருந்தை பயன்படுத்துவதுடன், தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
ஆயுஷ்-64 மருந்து வெளிச்சந்தையில் கிடைக்குமா?
இந்த மருந்தை ஆயுர்வேத மருந்தகங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். எனினும் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும்
சுங்கச்சாவடிகளில் திரவ மருத்துவ ஆக்சிஜனை எடுத்து செல்லும் டேங்கர்கள் மற்றும் கொள்கலன்கள் உள்ளிட்ட வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மருத்துவ ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத தேவையை கருத்தில் கொண்டு, திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால ஊர்திகளுக்கு இணையாக இரண்டு மாத காலத்திற்கு அல்லது மேற்கொண்டு உத்தரவுகள் வரும் வரை கருதப்படும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஊரடங்கினை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிட ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம், நேற்று (08.05.2021) முதல் இன்று (09.05.2021) காலை 9.00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து 3,325 பேருந்துகள் இயக்கப்பட்டு , 1,33,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்றைய தினமும் (09.05.2021) பொதுமக்களின் வசதிக்காக, சென்னையிலிருந்து 4,816 பேருந்துகள் இயக்கப்படுகின்றன
கோவிட் - 19 நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் தேசிய விகிதம் 81.90 ஆக உள்ளது. தமிழகத்தில் 88.63 சதவிகிதம் பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
கொவிட்-19 தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் ஆய்வகமான அணு மருந்தியல் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள 2-டிஜி (2-DG) என்ற தடுப்புமருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பெருந்தொற்றின் முதல் அலையின் போது நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்து கொவிட் தொற்றுக்கு எதிராகவும், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
அதன் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற்ற பல்வேறு கட்ட சோதனைகளில், 2-டிஜி மருந்தில் உள்ள மூலக்கூறுகளால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் விரைவாக குணமடையவும், பிராணவாயுவின் தேவையைக் குறைக்கவும் முடியும் என்பது தெரியவந்துள்ளது.
மிதமானது முதல் தீவிரமானது வரை தொற்று உள்ள நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகளுடன் 2-டிஜி மருந்தையும் சேர்த்து வழங்குவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமான நோயாளிகளுக்கு பிராணவாயுவும், மருத்துவமனையில் அனுமதியும் தேவைப்படும் சூழலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கையைக் குறைத்து, ஏராளமான உயிர்களைப் பாதுகாக்கும் வரப்பிரசாதமாக 2-டிஜி மருந்து அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது"
என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் -
தற்போதைய இறப்பு விகிதம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டால் 24 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வரை கொரோனா இறப்புகள் பதிவாகலாம் என்று IHME (Institute for Health Metrics and Evaluation) ஆய்வு மையம் கணித்துள்ளது. மாநிலத்தில் முகக்கவசம் மற்றும் சமூக விலகல் நெறிமுறைகள் கடைப்டித்தால் இந்த எண்ணிக்கை 23 ஆயிரம் முதல் 37 ஆயிரம் வரை இருக்கும் என்றும், மோசமான நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை 27 ஆயிரம் முதல் 47 ஆயிரம் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருந்தார்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 23,110 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தற்போது கோவிட்-19 பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,39,401-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் நோய்த் தொற்றினால் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா தொடர்பாக இறப்பு எண்ணிக்கை 15,412 ஆக அதிகரித்துள்ளது.
Background
Corona Virus Latest News in Tamil: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 23,110 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தற்போது கோவிட்-19 பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,39,401-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு இதுவரை 74,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரச தெரிவித்தது. இதில் 3.94% வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து மொத்தம், 66,74,970 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7,28,980 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திடம் இருப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனை அடிப்படையில் தடுப்பு மருந்துகளை டிரோன் மூலம் விநியோகிப்பதற்காக தெலங்கானா அரசுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ஆகியவை நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. ஆளில்லாத விமானம் அமைப்பு விதிகள் 2021-இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -