உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. உயிர் என்பது விலை மதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றி வருவதாக பாராட்டை பெற்று வருகிறது.


கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு:


இந்த நிலையில், 20 கண் வங்கிகள் மூலம் 21,818 கண்கள் தானமாக பெறப்பட்டு, கண் கருவிழி மாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண் தானம் தொடர்பாக இணைய செயலி உருவாக்கியதன் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 10.000 கண் கொடையாளர்கள் தங்கள் கண்களைத் தானம் செய்வதற்குப் பதிவு செய்துள்ளனர்.


கண் மருத்துவப் பிரிவில் மேலும் சிறப்பான சேவைகள் அளித்திட இந்த ஆட்சியில் தஞ்சாவூர் அரசு இராசா-மிராசுதார் மருத்துவமனையில் மண்டல கண் சிகிச்சை மையம் சுமார் 16.5 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.


திருவள்ளூர், தென்காசி, திருப்பத்தூர் முதலிய துணை மாவட்ட மருத்துவமனைகள். தாம்பரம், திருப்பெரும்புதூர் கண் வங்கிகள் முதலியவற்றுக்கு 7.25 கோடி ரூபாய்ச் செலவில் உயர்தர கண் மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.


எடுத்துக்காட்டாக திகழும் தமிழ்நாடு:


சென்னை மண்டல கண் சிகிச்சை நிலையத்தின் இருநூற்றாண்டு விழா நினைவாக ரூ.65.60 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 8 கோடி ரூபாய்ச் செலவில் உயர்தர உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் நலனுக்காக மாண்புமிகு அமைச்சர், அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் அனைவருக்கும் அளித்து வரும் ஊக்கம் காரணமாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்திய அளவில் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று வருகிறது.


அந்த வரிசையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஹெபாடிடிஸ் பி சோதனை (Hepatitis B test) செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்று விருது பெற்றுள்ளது. தொலைதூர மருத்துவச் சேவையில் கிடைத்திருக்கிறது. (Teleconsultation) தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு.


கர்ப்பிணிகளுக்கு மிகவும் தரமான சிகிச்சை அளிக்கிறது தமிழ்நாடு என்று பாராட்டப்பட்டு இந்தியாவில் சிறந்த மாநிலம் என விருது வழங்கப்பட்டுள்ளது. பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் தூதுவர் திட்டத்தில் இந்தியாவில் முதல் மாநிலம் எனத் தமிழ்நாட்டிற்கு விருது கிடைத்துள்ளது.


தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் (National Organ and Tissue Transplant Organization) சிறந்த மாநிலம் (Best State Award) என்னும் விருதும்; தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்திற்குச் சிறந்த சேவை விருதும் (Best Performance State) வழங்கப்பட்டுள்ளன. இந்த விருகளுடன் மேலும் பல விருதுகளையும் பெற்றுத் தமிழ்நாடு சுகாதாரத்துறை விருது மழையில் மிளிர்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.