ஆட்சியில் பங்கு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், "காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். முதலமைச்சர் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நன்றாக இருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


திமுகவுக்கு செக் வைக்கிறதா காங்கிரஸ்?


விழுப்புரம் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கூட்டணிக்கு விஜய் அழைப்பு விடுத்திருந்தார். குறிப்பாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்ட அடுத்த நாளே, தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் இருந்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு.


தமிழக முதல்வருக்கு பறந்த கடிதம்:


தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு வணக்கம். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026யில் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.


ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.


எனவே, தமிழக மக்களின் என்னத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் சமீப காலமாக குழப்பம் நீடித்து வருகிறது. ஆட்சியில் பங்கு அளிக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே பேசி இருக்கிறார்.


சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தின்போது, இடதுசாரிகளுக்கும் திமுகவுக்கு மாற்று கருத்து நிலவியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது காங்கிரஸ் கட்சியும், அதிகாரத்தில் பங்கு கேட்டி கடிதம் அனுப்பியுள்ளது.