TN Coastal Restoration : காலநிலை மாற்றம் உலக நாடுகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் வெள்ளம் ஏற்படுவதற்கும் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.


காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சூப்பர் திட்டம்:


காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், சுற்றுச்சூழல் அமைக்கதத்தின் பெயரை சுற்றச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகம் என பெயர் மாற்றியது. அதன் தொடர்ச்சியாக, காலநிலை மாற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில், கடந்த 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பில் காலநிலை மாற்ற தணிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அது பல்வேறு கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில், நான்காவது காலநிலை மாற்ற தணிப்பு திட்டம் (தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையாகப் பயன்படுத்தும் திட்டம்) சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது, தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணி என்றும் அழைக்கப்படுகிறது. உலக வங்கியின் உதவியில் 1,675 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடல் அரிப்பை கட்டுப்படுத்தி கடல் மாசுபாட்டைக் குறைத்து கடல் பல்லுயிர்களைப் பாதுகாப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டிருந்தார்.


வாவ் சொல்ல வைக்கும் தமிழ்நாடு அரசு:


இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு புளூ கார்பன் ஏஜென்சி என்ற நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. சதுப்புநிலங்கள், உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நில காடுகள், கடல் தாவரங்கள் உள்ளிட்ட கடலோர சுற்றுச்சூழல் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதனை மீட்டெடுத்து காக்க தமிழ்நாடு புளூ கார்பன் ஏஜென்சி உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டம், சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கார்பன் வரவுகளை வர்த்தகம் செய்வதற்கான ஒரு கட்டமைப்பையும் உருவாக்க உதவும்.


இதற்கு மத்தியில், தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆறு மற்றும் கடற்கரைகளில் பிளாஸ்டிக் கலப்பதை தவிர்க்கும் நோக்கில் பிளாஸ்டிக் குப்பை இன்டர்செப்டரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், 14 கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு கடற்கரை மீட்பு பணி திட்டத்தை அமல்படுத்த 1675 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.


இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், "நமது ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் பிளாஸ்டி கலப்பதை தடுக்க பிளாஸ்டிக் குப்பை  இன்டர்செப்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள 14 கடலோர மாவட்டங்களுக்கு ரூ.1675 கோடி செலவில் தமிழக கடலோர மறுசீரமைப்பு பணிக்கு அனுமதி அளித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்


 






பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க பிளாஸ்டிக் குப்பை  போன்ற பல முயற்சிகளில் நாங்கள் பணியாற்றுவோம். பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க பிளாஸ்டிக் குப்பை இன்டர்செப்டரை பயன்படுத்துவது போன்ற பல திட்டங்களில் பணியாற்ற உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.