மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து:


எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், "நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!


 






இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்டிருந்தது. இந்த ஏலத்தை வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. பொதுமக்கள் தொடர்ந்து அங்கு சுரங்கம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏல உரிமை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


"பதவியில் இருக்க மாட்டேன்"


முன்னதாக, அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் எக்காரணத்தை கொண்டு தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது எனவும் அப்படி அமைந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியளித்திருந்தார்.


இதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும் நாடாளுமன்றத்திலும் எம்.பிக்கள் தொடர்ந்து சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.


இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்