பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் தன்னை படிக்க வைக்குமாறு தனக்கு கடிதம் எழுதிய மாணவியை படிக்க வைத்ததோடு அவருக்கு வேலை வழங்கி ஊக்குவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து அந்த மாணவி முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வரிடம் உதவி கேட்ட மாணவி:
கடந்த 2021 ஆம் ஆண்டு மாணவி ஷோபனா வறுமை காரனமாக தன்னால் படிப்பை தொடர இயலவில்லை என முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து மாணவிக்கு உடனடியாக அரசு கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்துள்ளார் முதல்வர்.
இதைத்தொடர்ந்து படிப்பை முடித்தவுடன் தன்னை வந்து சந்திக்குமாறு மாணவியிடம் அவர் கூறியுள்ளார். அதன் படி மூன்று ஆண்டுகள் கழித்து மாணவி ஷோபனா முதல்வரை சந்தித்துள்ளார். தற்போது இளங்கலை பட்டம் பெற்று பணிபுரிந்து வரும் ஷோபனா அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.மேலும் தன்னை காண வந்த மாணவிக்கு அன்பு பரிசாய் தனது கையெழுத்திட்ட புத்தகம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.
’’பெண் கல்வி அவசியம்’’
இந்நிலையில் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ’’படிக்க உதவிட வேண்டும் என 2021-ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன்.
மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன். ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்’’என தெரிவித்துள்ளார்.
கல்வி மட்டும் இன்றி அடிப்படை உரிமைகள், மருத்துவப் பாதுகாப்பு, பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கட்டாய குழந்தைத் திருமணம் போன்றவற்றில் இருந்து பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் இன்றும் நம் சமூகத்தில் உள்ளன.
நம் சமூகத்தில் நீண்ட காலமாக பெண் குழந்தைகள் பெரும்பாலும் பாகுபாட்டுக்கு ஆளாகியிருப்பதை நம் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. சிறந்த வாழ்க்கை முறையை வழங்குவது அல்லது கல்வி போன்ற சேவைகளை வழங்குவது போன்றவற்றில் பெண் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது ஆண் குழந்தைக்கு எப்போதும் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், இந்த மனநிலை நீண்ட காலமாக நம் உலகில் பெண்ணின் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஆனால், கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள பல தாக்கங்களை உருவாக்கியுள்ளன.