தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (19.10.2024) தென் மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.


அப்போது பேசிய அவர், "சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நீர் மேலாண்மை போன்ற பல்வேறு அடிப்படையில் தென்மாநிலங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாம் செயல்பட்டு வருகிறோம். போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான குற்றச்செயல்கள், இணையவழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றச்சம்பவங்களில் இருந்து, நம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


"போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர கவனம்"


இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு முன்னற்றங்களை அடைந்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.


போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வியூகங்களை நாங்கள் கையாண்டு வருகிறோம்.


ஒன்று. கைது செய்வதோடு மட்டுமின்றி சொத்து பறிமுதல், வங்கிகணக்கு முடக்கம். கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம். கடும் சிறைத்தண்டனை பெற்றுத்தருவது உள்ளிட்ட தீவிர சட்ட அமலாக்கம் மூலமாக போதைப்பொருள்களை ஒழிப்பது.


இரண்டாவது, போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள்! இவை மிக நல்ல பலன்களை கொடுத்திருக்கிறது.


தமிழக காவல்துறைக்கு பாராட்டு:


தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. போதைப்பொருள் குற்றவாளிகளின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.


இதன் மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களது சொத்துகள் பல மாநிலங்களில் பரவிகிடக்கிறது. போதைப் பொருட்களைஒழிக்க, ஒன்றிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது என்பதால்தான், நாம் எல்லாம் இன்றைக்கு ஒன்று கூடியிருக்கிறோம்.


குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் உங்கள் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அதை வழங்குமாறு நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.


குறிப்பாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க, தமிழ்நாடு காவல்துறையினரும், அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.


சமீபத்தில், கேரள காவல்துறையினர் கொடுத்த தகவலை வைத்து, நாமக்கல் மாவட்டத்தில். ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடிக்கும் கொடுங்கும்பலை தமிழ்நாடு காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்தார்கள். இந்தக் குற்றவாளிகள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தை நடத்திக்கொண்டு திருச்சூரில் இருந்து தப்பித்திருக்கிறார்கள்.


இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததது. தமிழ்நாடு காவல்துறை உடனிடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களை உஷார்படுத்தியது. இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினரை நான் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.


இது போன்ற ஒருங்கிணைப்புகளை நாம் அனைவருக்குள்ளும் முன்னெடுப்பதுதான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம்! அண்மையில், பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் எரிசாராயத்தை வைத்து சட்டவிரோதமாக போலி மதுபானம் தயாரிக்கும் ஆலையை தமிழ்நாடு காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள்.


இந்தச் சட்டவிரோத எரிசாராய கும்பல்கள் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மாநிலத்துக்குள்ளே நுழைவதை தடுக்க மாநில எல்லைகளில் கடுமையான சோதனைகளை மேற்கொள்ளவேண்டியது அவசரத் தேவையாக இருக்கிறது.


இணையவழி குற்றம் என்பது எந்தவித எல்லையும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, பெருகிவரக்கூடிய மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பான வகையில் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.


பெரும்பாலும், இணையவழி குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநிலத்தின் காவல்துறை மற்றொரு மாநிலத்துக்குச் செல்லவேண்டிய நிலையில், அவர்கள் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, இணையவழிக் குற்றங்களை தடுப்பதிலும் நாம் இணைந்து செயல்படவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.