ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது உயிரிழந்த இருவரது குடும்பத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.


திருச்சிசூரியூரில் ஜல்லிக்கட்டை காணவந்தபோது காயமடைந்து இறந்த அரவிந்த் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


அதேபோல, பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த அரவிந்தராஜ் குடும்பத்திற்கும் 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தராஜ் (வயது 24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


இந்த துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்‌. இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.


காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தம் 860 காளைகள் களமிறங்கின.  பாலமேடு ஜல்லிக்கட்டில் சின்னப்பட்டி தமிழரசன் 23 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை வென்றார். அவரை தொடர்ந்து, பாலமேடு மணி 19 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், ராஜா 15 காளைகளை அடக்கி மூன்றாவது இடமும் பிடித்தனர். 


மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கி மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்த நெல்லை பொன்னர் சுவாமி கோயில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.



நாளை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மஞ்சுவிரட்டு, எருதுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.


கடந்த 2014ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, ஜல்லிக்கட்டின் மீதான தடை திரும்ப பெறப்பட்டது.