பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்துள்ளது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. நேற்றைய கூட்டம் இரவு விருந்துடன் முடிவடைந்தது.


"எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கும்போதெல்லாம் அமலாக்கத்துறை சோதனை"


இதை தொடர்ந்து, கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று பல்வேறு தலைவர்கள், தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர். அப்போது, பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக சாடி பேசினார். எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கும்போதெல்லாம் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


"பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்றபோது திமுகவை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றபோதும் சோதனை நடைபெற்றது. எதிர்க்கட்சிகளுக்குள் குறைந்தபட்ச செயல் திட்டம் தேவை. ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி அவசியம்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுவதற்கு முன்பு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதேபோல, இரண்டாவது கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதை குறிப்பிட்டே முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு:


இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.


அதுமட்டும் இன்றி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகிய தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முதல் நாள் கூட்டத்தை தவிர்த்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இரண்டாவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் கலந்து கொண்ட கார்கே பேசுகையில், "சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேச நலன் ஆகியவை குறித்து திட்டமிட ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்.


வெறுப்பு, பிரிவினை, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் போன்ற எதேச்சதிகார மற்றும் மக்கள் விரோத அரசியலில் இருந்து இந்திய மக்களை விடுவிக்க விரும்புகிறோம். இந்தியாவுக்காக ஒற்றுமையுடன் நிற்கிறோம்" என்றார்.