இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அரசு தரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.  உயர் கல்வித்துறையின் சார்பில் "ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி, சந்திரயான் -3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர். 




இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் "இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது. “ தமிழனாக பிறந்த பெருமையை நான் சமீப காலமாக அதிகமாக உணர்ந்து வருகிறேன். கல்வி சிறந்த தமிழ்நாடு..கம்பன் பிறந்த தமிழ்நாடு....வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு  என்று பாடிய மகாகவி பாரதியார் இப்போ இருந்திருந்தால் இஸ்ரோ சிவனும் மயில்சாமி அண்ணாதுறை பிறந்த தமிழ்நாடு ..நாரயணன்,ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி, வீரமுத்துவேல் பிறந்த தமிழ்நாடு என்று பாராட்டி பாடியிருப்பார். ஆகஸ்ட் 23-ம் நாள் உலக்த்திற்கு மிகவும் முக்கியமான நாள். சந்திரயான் -3 விண்கலம் நிலவில் களமிறங்கி வெற்றியடைந்த நாள். நிலவைத் தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மற்ற நாடுகளுக்கு இல்லாத சிறப்பையும் இந்தியா பெற்றிருக்கிறது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் பணியை சந்திரயான் - 3 தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் தென்னிந்தியாவின், அதுவும் தென் தழிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் திட்ட இயக்குநராக இருந்தது பெருமையிலும் பெருமை. கலைஞர் கருணாநிதி அவர்களால் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது ‘ இத்தனை அறிவியல் ஆளுமைகள் உருவாகியிருக்கிறார்கள் இந்த மேடையை பாருங்க அண்ணா.!’ என்று சொல்வதற்காகவே..தமிழ் அறிவு என்பது எதையும் பகுத்தறிவோடு அணுகுவதுதான். விருப்பு வெறுப்பற்ற அறிவுதான் தமிழ்நாட்டின் அறிவாக இருந்து வருகிறது. “ என தெரிவித்துள்ளார்.