CM Vijay: முதலமைச்சரான பிறகு விஜய் முதல் கடிதம்! யாருக்கு? எதற்காக எழுதியுள்ளார்?
CM Vijay First Letter: தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் தனது முதல் கடிதத்தை தமிழக மீனவர்களுக்காக மத்திய அரசுக்கு எழுதியுள்ளார்.

CM Vijay First Letter: தமிழ்நாட்டில் எந்த அரசு பொறுப்பேற்றாலும் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தடுக்கப்படாமல் இருப்பது ஆகும். மத்திய அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ஒவ்வொரு முறை ஆட்சியில் இருந்த அரசும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளனர்.
முதலமைச்சராக முதல் கடிதம்:
இந்த சூழலில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற விஜய் இன்று தனது முதல் கடிதத்தை எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
என்ன எழுதியுள்ளார்?
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் கடந்த 10ம் தேதி நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 12, 2026
1/2
2/2
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 12, 2026
மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்#CMJosephVijay pic.twitter.com/kQpBYng2B7
அவர்கள் சர்வதேச எல்லையை கடந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.
எனவே, இப்பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக மீட்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர தீர்வு கிடைக்குமா?
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும், கைது நடவடிக்கைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே இந்த விவகாரத்தில் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிரந்தர தீர்வு காண்பதில்லை.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள், வலைகள் என அவர்களின் உடைமைகள் இலங்கையில் இருந்து மீட்கப்பட முடியாமலே இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தவெக ஆட்சியில் தங்களது பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு கிடைக்குமா? என்று ஆவலுடன் மீனவர்கள் உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















