கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தடுப்பூசிகளின் விலை அதிகமானதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயித்திருப்பது அநியாயம். கொரோனா தடுப்பூசிக்கான விலையை குறைக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாக வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.