தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஈரோடு தேர்தல் பிரச்சார நிறைவு நாளான (சனிக்கிழமை) காலை முதல் மாலை வரை பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். 


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, இவரை ஆதரித்து திமுக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை (சனிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். 


ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், முதலில் சம்பத் நகரில் திறந்தவேனில் நின்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கிறார். அதன் தொடர்ச்சியாக, பாரதி திரையரங்கும், பெரியவலசு, சத்தி சாலை, பேருந்து நிலையம், மெட்ராஸ் ஹோட்டல், மஜித் வீதி வழியாக சென்று கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே வேனில் நின்றவாறி காலை 10 மணிக்கு தனது பிரச்சாரத்தை தொடர்கிறார். 


பின்னர் காலை 11 மணியளவில் கேஎன்கே சாலை மூலப்பட்டறை, பவானி சாலை வழியாக பிபெ அக்ரஹாரத்தில் தனது பிரச்சாரத்தை முடிக்கும் முதலமைச்சர், மாலை 3 மணிக்கு மீண்டும் சம்பத் நகர், இடையன்காட்டு வலசு, சின்னமுத்து வீதி வழியாக சென்று கலைஞர் படிப்பகம் அருகே பேச இருக்கிறார். தொடர்ந்து மேட்டூர் சாலை, பன்னீர்செல்வம் பூங்கா வழியாக சென்று மாலை 3.45 மணிக்கு பெரியார் நகரில் பேசி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.  


தீவிர பிரச்சாரத்தில் கட்சிகள்: 


தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிவித்தது முதல் திமுகவினர் வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  


இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார். ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றார்.


மேலும், அமமுக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா ஆகியோரை அந்தந்த கட்சிகள் அறிவித்தன. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தங்களுக்கான சின்னத்தை ஒதுக்காததால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தார் டிடிவி தினகரன். மறுபக்கம், திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். எந்த தெருவுக்குள் சென்றாலும் அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். இன்னும் ஒரே நாட்களில் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையால் ஈரோடு கிழக்கு விழாக்கோலம் பூண்டுள்ளது.