ஆளுநர் சிலரின் கைப்பாவையாக செயல்படாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 


தமிழ்நாடு ஆளுநருக்கும் அரசுக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் பதிலளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது, அல்லது அதனை திருப்பி அனுப்புவது இல்லையெனில் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.


இதையடுத்து தான் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தமனு விசாரணைக்கு வந்த போது, ஆளுநருக்கு எதிராக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.


அப்போது, “சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். தமிழ்நாடு ஆளுநருக்கும், முதலமைச்சருருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து இதைத் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம். ஆளுநர் முதலமைச்சரை அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.


இந்நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்தே முதலமைச்சர் ஆலோசனைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.


இதனை தொடர்ந்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், முதல்வராகிய நீங்களும் ஆளுநரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆளுநர் உங்களை அழைத்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ”ஆளுநர் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார், பேசினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சினை. ஆளுநர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்” என பேசியுள்ளார்.