நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவசர கதியில் விமானம் தரையிறக்கப்பட்ட பின், அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.






 தேர்தல் பரப்புரையில் மம்தா பானர்ஜி:


மேற்குவங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 8ம் தேதி அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரசிற்கும், எதிர்க்கட்சியான பாஜகவிற்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் மம்தா பானர்ஜி சூறாவளி பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்.


அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்:


பாக்டோக்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற பிறகு, ஜல்பைகுரி பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்ற போது, பைகுந்தபூர் வனப்பகுதியில் கனமழை காரணமாக  போதிய வெளிச்சமின்மை இல்லாத சூழல் உருவானது.  இதனால் ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமான ஓட்டி தடுமாறிய நிலையில், அவசர கதியில் அந்த ஹெலிகாப்டர் சிலிகுரி அருகே உள்ள செவோக் ஏர்பேஸில் தரையிறக்கப்பட்டது.


மம்தா பானர்ஜி உடல்நிலை:






பின் சாலை மார்கமாக கொல்கத்தாவை வந்தடைந்த மம்தா பானர்ஜி உடனடியாக, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில், மம்தா பானர்ஜி முதுகுத்தண்டு மற்றும் மூட்டில் வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு இடது முழங்காலில் லிகமெண்ட் டியர் (ligament tear) மற்றும் இடது பக்க இடுப்பு பகுதி எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கபடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 


இந்த செய்தியை கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.