ஆதிதிராவிட மக்களுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்!
இலண்டன் சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபோதும், அச்சம் என்பதே இன்றி, அவருடன் கைக்குலுக்க மறுத்து, இந்தியாவில் நிகழ்ந்து வரும் தீண்டாமைக் கொடுமைகளை எடுத்துக் கூறியதுதான் அவரது நெஞ்சுரம். வட்டமேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் நகமும் சதையும் போல இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பேசினார்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசனாரின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம்! சமத்துவத்துக்கான பயணத்தில் சமரசம் தவிர்த்து வெல்வோம்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து:
பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு அயராது உழைத்த ஐயா திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த தினம் இன்று. கல்வியே ஒருவருக்கு முன்னேற்றம் தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, நூறு ஆண்டுகளுக்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கி, தேசிய அளவில் பட்டம் பெற்ற முதல் பட்டியல் சமூகத்தினர் என்ற பெருமையுடையவர்.
தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு, ஜாதிப் பாகுபாடு ஒழிப்பு, ஆலய நுழைவு, இட ஒதுக்கீடு, நில உரிமை என பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்து, அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அயோத்திதாசர் என பல தலைவர்களுக்கும் முன்னோடியாக இருந்தவர். நிலமற்றவர்களுக்காக, பஞ்சமி நிலம் வழங்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தவர். தமிழகத்தில் மாபெரும் சமூக நீதிப் புரட்சிக்கு வித்திட்டவரும், சமுதாயத்தில் நிலவிய பெரும்பாலான ஏற்றத் தாழ்வுகளை சட்டரீதியாகக் களைந்தவருமான ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம்.
திருமாவளவன் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்
தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாளான இன்று (சூலை -07) கிண்டியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் வீரவணக்கம் செலுத்தினோம்.
தாத்தா ரெட்டமலை சீனிவாசனார் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சனநாயக சக்திகளை அணிதிரட்டியவர். . பறையன் எனும் பெயரில் அமைப்பும் இதழும் தொடங்கி நடத்தியவர் எனினும் சாதி ஒழிப்பே அவரது இறுதி இலக்காகும். சனாதனத்தை வேரறுக்க புரட்சியாளர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றியவர். அவர் கனவை நனவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.