சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்பட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சுதந்திர தின விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை மறுநாள் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது. 


2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விருது காவல்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்தல், சட்ட விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையசை் சேர்ந்த 6 பேருக்கு முதலமைச்சர் விருது அளிக்கப்பட உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




சென்னை மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் ரயில்வே மண்டலத்தின் காவல் துணை கண்காணிப்பாளர் என்.குணசேகரன், நாமக்கல் மாவட்ட காவல் துணை ஆய்வாளர் எஸ் முருகன், நாமக்கல் மாவட்ட கிரேடு 1 பி.சி ஆர்.குமார் ஆகிய 6 பேருக்கும் முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின அணிவகுப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.


சுதந்திர தின விழா 


சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மாநகரில் 9,000 காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


இது தொடர்பாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா பேருரையாற்றுகிறார். இதனால் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளது. இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் இருப்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்தாண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் மூன்றாவது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


வண்டலூர் உயிரியல் பூங்கா


வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 15 ஆம் தேதி செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

செவ்வாய்க்கிழமையில் வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை என்றாலும், விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விடுமுறை தினங்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.