தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநர் உரை மற்றும் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல UKS எனப்படும் ’உங்க கனவை சொல்லுங்க’ என்னும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
’’நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தமிழ்நாட்டில் பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறோம். ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகத்தை இரட்டை இலக்க பொருளாதாரம் கொண்ட மாநிலமாக முதல்வர் மாற்றியுள்ளார். மற்ற நாடுகளும் உற்றுநோக்கிப் பார்க்கும் வளர்ச்சியைப் பெற்று வருகிறோம்.
உங்க கனவை சொல்லுங்க திட்டம்
’உங்க கனவை சொல்லுங்க’ (யுகேஎஸ்) என்னும் கருத்துக் கேட்கும் திட்டத்தைக் கொண்டு வர உள்ளோம். இதற்கென 50 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மூலம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தனித்தனிப் படிவங்கள் அளிக்கப்படும். அவர்களின் முதல் 3 கனவுகள் குறித்து கேட்க உள்ளோம். இணையதளம் மூலமும் ஒவ்வொரு இளைஞரும் 3 யோசனைகளைச் சொல்லலாம். 2030-ல் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற யோசனையை அளிப்பதாக இருக்கலாம்.
ஜனவரி 9 தொடக்கம்
அயலகத் தமிழர்களின் கனவுகளையும் கேட்டறிய உள்ளோம். ஜனவரி 9ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான இணையதளம் ஜனவரி 11ஆம் தேதி அன்று பயன்பாட்டுக்கு வர உள்ளது’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
