மற்ற மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தது போல் தமிழகத்தில் திமுக அரசு VATவரியை குறைக்க வேண்டும் என கோரி சென்னையில் இன்று பாஜக போராட்டம் நடத்தியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை மத்திய அரசு தீபாவளியன்று குறைத்தது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் இன்றும் விலை மாற்றமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 18வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை போராட்டம் நடத்த இருப்பதாக பாஜக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, இது குறித்து பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்த படி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும் மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும் பெட்ரோலுக்கு 5 ரூபாயும் மக்களுக்கு கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை தங்கள் பங்கிற்க்கு குறைத்துள்ளது.
தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூபாய் 100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி 22.11.2021 முதல் 03.12.2021 வரை தொடர் போராட்டங்கள் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து, தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்