TN 12th Result 2026 - காஞ்சிபுரம்: மாஸ் காட்டிய பிளஸ் 2 ரிசல்ட்! மாநில தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்!
Tamil Nadu 12th Result 2026: "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் காஞ்சிபுர மாவட்டம், 95.31% தேர்ச்சி பெற்று மாநில அளவில் தரவரசியில் முன்னேற்றம் அடைந்துள்ளது."

2026 மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு (பிளஸ் 2) அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த ஆண்டை விட சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, கல்வித் துறையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட தேர்ச்சி புள்ளிவிவரங்கள்
இவ்வாண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மொத்தம் 14,032 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 6,664 மாணவர்களும், 7,368 மாணவிகளும் அடங்குவர்.
தேர்வு முடிவுகளின் அடிப்படையில்: மொத்த தேர்ச்சி: 13,374 பேர் (95.31%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள்: 7,136 பேர் தேர்ச்சி பெற்று 96.85% விழுக்காடு பெற்றுள்ளனர்.
மாணவர்கள்: 6,238 பேர் தேர்ச்சி பெற்று 93.61% விழுக்காடு பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 3.24% கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவிலான தரவரிசையில் முன்னேற்றம்
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இவ்வாண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மாநில அளவிலான தரவரிசையில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 2.04% அதிகரித்துள்ளது.
இதன் மூலம் மாநில அளவிலான பொதுத் தரவரிசையில், கடந்த ஆண்டு 32-வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் மாவட்டம், இவ்வாண்டு 21-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில், கடந்த ஆண்டு 31-வது இடத்திலிருந்து தற்போது 18-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்வித் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலனாக, இவ்வாண்டு மொத்தம் 36 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 6 அரசுப் பள்ளிகள் முழுமையான தேர்ச்சியைப் பெற்று சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இந்தச் சிறப்பான வெற்றியைப் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















