சேலத்தில் கம்பன் கழகம் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களாக சேலம் அழகாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கம்பரின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். இன்று நடைபெற்ற பொன்விழா இறுதி நாள் நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தலைவர் ஜி கே வாசன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கவியரசர் கம்பர் இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் இயற்றிய கம்ப ராமாயணம், புகழ் பெற்றதாகும். கம்பர் தனக்கே உரித்தான பாணியில், தன் புலமையை வெளிக்காட்ட, வடமொழியில் வால்மீகி அவர்கள் எழுதிய இராமர் பற்றிய காவியத்தை, தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். இராமகதை பற்றி பல பாடல்கள் புலவர்களால் இயற்றப்பட்டன. எனவே கம்பர் எழுதிய இராமவதாரம், அவரது பெயரை இணைத்து கம்ப இராமாயணம் என்று மக்களால் அழைக்கப்பட்டது. வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களை, தனது நூலில் கையாண்டதால், கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார். கம்பரின் வழியில், தனித்தமிழ் நடையோடு, அறநெறி சார்ந்து படைப்புகளைப் படைக்கும் படைப்பாளர்களையும், கம்பரின் சிந்தனையை, அடுத்த தலைமுறையினர் இடையே பரப்புவோரையும், ஊக்கப்படுத்திப் பாராட்டும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2013 ஆம் ஆண்டு கவிச்சக்கரவர்த்தியின் பெயரால் "கம்பர் விருது" என்ற விருதை தோற்றுவித்தார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் நவீனமயம் ஆக்கப்பட வேண்டும் என்று தான் மத்திய அமைச்சராக இருந்தபோது உழைத்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி கே வாசன். அவரது காலத்தில் துவக்கி வைத்த திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால் ஏற்றுமதி இறக்குமதி இருந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும். அதற்கு அடித்தளம் போட்டவர் ஜி கே வாசன். நமது சேலத்தில் கம்பன் கழகம் ஐம்பதாவது பொன்விழா ஆண்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நமது குழந்தைகள் தமிழ் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் வேண்டும் இல்லை என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் எல்லா பெற்றோரும் ஆங்கிலத்தில் பேசினால் நமது குழந்தை மிகப்பெரிய அறிவாளி என்று நினைக்கிறோம், ஆனால் தமிழ் தான் நமது தாய்மொழி அதையும் மறந்து விடக்கூடாது என்றார். பெற்றோர்கள் தமிழையும் தங்களது குழந்தைக்கு கற்பிக்க வேண்டும், தமிழே நமது தாய்மொழி. தாய் மொழியில் மிக எளிதாக அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். நமது தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகள் தாய் மொழியான தமிழனின் பேச வேண்டும். தமிழில் பேச தவிர்ப்பது உண்மையிலேயே வருத்தம் அளிப்பதாகவும், ஆங்கிலத்தில் பேசினால் தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என வரட்டு கௌரவம் இருந்து வருகிறது. தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இந்த கம்பன் கழகம் நடத்துகின்றனர். கம்பன் மறைந்தாலும் தொடர்ந்து கம்பன் கழகம் இத்தகைய விழாவை நடத்துவதை பாராட்டுகிறேன்" என்றும் அவர் கூறினார்.