தமிழ் அகராதியியல் நாள் விழாவில் விருது, ரூ.2லட்சம், 1 சவரன் உள்ளிட்ட பரிசுகள் பெற விண்ணப்பிக்க அக்டோபர் 7ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

தமிழ்நாடு அரசின் சீரிய நெறிப்படுத்தலின்கீழ், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், “மொழிஞாயிறு“ தேவநேயப் பாவாணர் அகராதியியல் நெறிப்படி, மொழிக் காப்புக் கருவூலங்களான அகராதிகளை உருவாக்கி வருவதோடு, காலத்தின் தேவையான தமிழ்க் கலைச்சொல்லாக்கப்
பணியையும் தொடர்ந்து செய்து வருகிறது. 

இப்பணிக்குத் துணைநிற்கும் வகையில் செயலாற்றிவரும் அகராதியியல் அறிஞர்கள், கலைச்சொல்லாக்க வல்லுநர்கள், நற்றமிழ் பரப்பும் ஊடகத் துறையினர், பைந்தமிழ் காக்கும் பாவலர்கள் உள்ளிட்டோரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் “தேவநேயப் பாவாணர் விருது“, “வீரமா முனிவர் விருது“, “தூய தமிழ் ஊடக விருது“, “நற்றமிழ்ப் பாவலர் விருது“, “தூயதமிழ்ப் பற்றாளர் விருது“ ஆகிய விருதுகளும், தூயதமிழில் பேசுவோருக்கான பரிசு, பள்ளி மாணவர்களுக்குரிய கலைச்சொல்லாக்கம் (ம) சொல் - பொருள் - ஓவியப் போட்டிக்கான பரிசு ஆகியவையும் வீரமா முனிவரின் பிறந்தநாளான நவம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படும் “தமிழ் அகராதியியல் நாள் விழா“வில் வழங்கப்பட்டு வருகின்றன.

 

வ.எண் விருது பெயர் தகுதிகள் பரிசு விவரம்  
1.  தேவநேயப் பாவாணர் விருது தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் (ம) தனித்தமிழைப் பின்பற்றுதல் உள்ளிட்ட ஆய்வும் தமிழ் ஈடுபாடும் கொண்டு பணியாற்றுகிற, அகராதியியல் துறையில் சிறந்து விளங்குகிற தகுதிவாய்ந்த உள்நாட்டு அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். ரூபாய் 2 இலட்சம் பரிசுத்தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை  
2. வீரமாமுனிவர் விருது i வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித் துறையில் சிறந்து விளங்கியும், தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி
வாய்ந்த அகராதியியல் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
ரூபாய் 2 இலட்சம் பரிசுத்தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை  
3. தூய தமிழ் ஊடக விருது  காட்சி (ம) அச்சு ஊடகங்களில் பிறமொழிக் கலப்பின்றித் தூய தமிழைப் பயன்படுத்தி ஊடகப் பணிகளை ஆற்றி வருதல் வேண்டும்.
 ஊடகங்களின் நிறுவனப் பெயரும் தூய தமிழில் மட்டுமே அமைந்திருத்தல் வேண்டும்.
 ஊடகங்களில் தமிழிலக்கியம், பண்பாடு, நாகரிகம் தொடர்பான சேவைகளும் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.
 தூய தமிழைப் பயன்படுத்தி ஊடகப் பணிகளை ஆற்றிவரும் தொலைக்காட்சிகள் (ம) வலைத் தளங்கள் இவ்விருதுக்குத்
தகுதியானவை.
அச்சு ஊடகம், காட்சி ஊடகத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ரூபாய் 50 ஆயிரம் பரிசுத்தொகை, தங்கப்பதக்கம், தகுதியுரை  
4.

நற்றமிழ்ப் பாவலர் விருது

தங்களின் கவிதைப் படைப்புகளில்
(மரபுக்கவிதை, புதுக்கவிதை)
பிறமொழிக் கலப்பில்லாத தூயதமிழ்ச்
சொற்களையும் புதிய தமிழ்க்
கலைச்சொற்களையும் பயன்படுத்தி
மொழிக்குப் புத்துயிரும் புது
மலர்ச்சியையும் ஏற்படுத்தும்
பாவலர்கள் விண்ணப்பிக்கலாம்.
மரபுக் கவிஞர்,
புதுக்கவிஞர்
ஒவ்வொருவருக்கும்
ரூபாய் 50 ஆயிரம்
பரிசுத்தொகை,
தங்கப்பதக்கம்,
தகுதியுரை
 
5  தூயதமிழ்ப்
பற்றாளர் விருது
நடைமுறை வாழ்க்கையிலும்,
பேச்சுவழக்கிலும் பிறமொழிக்
கலப்பில்லாமல், எப்பொழுதும்,
எங்கும் எதிலும் தூயதமிழையே
பயன்படுத்திக் கொண்டிருத்தல்
வேண்டும்.
மாவட்டந்தோறும்
ஒருவருக்கு ரூபாய் 20
ஆயிரம் பரிசுத்தொகை,
சான்றிதழ்
 

அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ் அகராதியியல் நாள் விழா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்தோர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சொற்குவை.காம் (www.sorkuvai.com) வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதில் அந்தந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்ப வேண்டும். அதை 7/10/2023 மாலை 5.30 மணிக்குள் இவ்வியக்ககத்திற்குக் கிடைக்குமாறு, “இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலகக் கட்டடம், முதல் தளம் எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, மே.இரா.செ.நகர், சென்னை-600 028” என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.