Continues below advertisement

திருச்சி மக்கள் கவனத்திற்கு

தாம்பரம் - திருச்சி இடையே வாரம் 5 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில், தனது கோரிக்கையை ஏற்று, இந்த ரயில் சேவை தற்போது நிரந்தரமாக மாற்றப்பட்டுள்ளதாக திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

Continues below advertisement

திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190 / 06191)தற்போது நிரந்தர விரைவு ரயிலாக (16807 / 16808) மாற்றப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில், இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை 10.12.2025 அன்று ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் நான் முன்வைத்தேன். அதனைத் தொடர்ந்து, 30.01.2026 அன்று தென்னக ரயில்வே பொதுமேலாளரிடமும் இதுகுறித்து விரிவான மனுவை அளித்தேன். இந்த தொடர்ந்த முயற்சிகளின் விளைவாக, தற்போது இந்த ரயில் நிரந்தர விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

 

தற்காலிக சிறப்பு ரயிலாக இயங்கிய காலத்திலேயே, 15.10.2025 முதல் திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற எனது தொடர்ந்த கோரிக்கையின் அடிப்படையில், திருவெறும்பூர் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட்டது.

தற்போது ரயில் நிரந்தர விரைவு ரயில் சேவையாக மாற்றப்பட்ட பின்னரும், திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தம் தொடர்ந்து வழங்கப்படுவது, அந்தப் பகுதி மக்களுக்கும் தினசரி பயணிகளுக்கும் மிகுந்த பயனை அளிக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

எனது கோரிக்கைகளை பரிசீலித்து, இந்த ரயிலை நிரந்தரமாக்கிய மதிப்பிற்குரிய ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களுக்கும், ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது திருச்சி தொகுதி  பயணிகள் நலனை முன்னிலைப்படுத்தி, பொதுமக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, ரயில் சேவைகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிரந்தரமாக செயல்படும் இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி வழியாக இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.