Tambaram - Chengalpattu 4th line: "தாம்பரம் - செங்கல்பட்டியிலேயே நாலாவது ரயில் பாதை அமைப்பதற்கான திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது"
சென்னையில் முக்கிய ரயில் வழித்தடம் - Tambaram to Chengalpattu Train
சென்னை புறநகர் மற்றும் சென்னை நகர் பகுதிகளை இணைக்கக்கூடிய மிக முக்கிய ரயில் வழித்தடங்களில் ஒன்றாக, செங்கல்பட்டு - தாம்பரம் ரயில் தடம் இருந்து வருகிறது. நாள்தோறும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக, சென்னை கடற்கரைக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பல ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் இருந்து சென்னை நகர் பகுதிக்கு வேலை நிமிர்த்தமாக செல்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தென் மாவட்டங்களுக்கு முக்கிய வழித்தடம்
இதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து, செல்லும் பெரும்பாலான தென் மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டு வழியாகவே செல்கின்றன. குறிப்பாக இந்த வழித்தடத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று முன்னுருக்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
மூன்று ரயில் பாதை மட்டும்
இந்த வழித்தடத்தில் மூன்று ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. கூடுதலான ரயில்களை இயக்க வசதியாக நான்காவது புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. நான்காவது புதிய ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்தது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ரயில்வே அமைச்சகத்திடம் தெற்கு ரயில்வே வழங்கியது. இந்தநிலையில் இந்த திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு என்ன ?
செங்கல்பட்டு - தாம்பரம் இடையே, 30 கிலோமீட்டர் தூரத்திற்கு 757.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்காவது ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் வழிவகை செய்யப்படும். மின்சார ரயில்களும் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்த வழித்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக இருந்து வருகிறது. நான்காவது ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறருக்கு 136 சதவீதமாக உயர உள்ளது. இதனால் பெரும் அளவு நெரிசல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? - Key Features
இதன்மூலம் கூடுதலான புறநகர் ரயில்களை இயக்க முடியும். தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், தினக்கூலிகள், ஐடி ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் இது பயனளிக்கும்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு கூடுதல் ரயில்களை இயக்குவதற்கும், சென்னை நகர் மக்கள் கிளாம்பாக்கம் வந்து செல்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.
பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளதால், அதற்கும் மறைமுகமாக இந்த ரயில் பாதை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் போன்று தாம்பரம் முக்கிய ரயில் நிலையமாக உருவெடுக்க தொடங்கியுள்ளது. இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டால், தாம்பரத்திலிருந்து செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான பயண நேரம் வெகுவாத குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே உள்ள ரயில் நிலையங்களில் நெரிசல் வெகுவாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.