தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகருக்கும் இடையே கடும் கருத்து மோதல்கள் நடந்து வருகிறது. சமூக வலைதளங்களில் அண்ணாமலையை ஒருமையில் விமர்சித்து வருகிறார் எஸ்.வி.சேகர். அண்ணாமலை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதுஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இணைய தளங்களில் எஸ்.பி.சேகர் பதிவிடும் ட்விட்டுக்கு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது எஸ்.வி.சேகர் அண்ணாமலையை விமர்சித்து ஒரு ட்விட் போட்டுள்ளார். அந்த பதிவை சிறிது நேரத்திலேயே நீக்கியும் உள்ளார்.


பாஜகவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால், அவரிடம் இருக்கும் இரு முக்கிய துறைகளை இருவேறு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு எடுத்தார்.


அதன்படி, நிதி  அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு பரிந்துறை கடிதமும் அனுப்பி இருந்தார். இதற்கிடையில், நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 


"நாங்கள் பழைய பாஜக இல்லை”


இதனை அடுத்து, மதுரை வந்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முதலமைச்சர் ஸ்டாலின் வரம்பை மீறி பேசியுள்ளார். செந்தில் பாலாஜி கைதுக்கு பின் முதலமைச்சரின் நடவடிக்கைகள் போல் இல்லை. காணொலி மூலமாக பாஜக தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளார்” என்றார்.


மேலும், "தமிழ்நாட்டில் பழைய பாஜக போல் தற்போதுள்ள பாஜக இல்லை. முதல்வரின் கோபம் ஊழல் செய்யும் அமைச்சரின் மீது இருக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நேர்மையாகத்தான் செயல்படுகிறது. முதலமைச்சரின் பேச்சுதான் நேர்மையானதாக இல்லை" என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.


கொந்தளித்த எஸ்.வி.சேகர்


நாங்கள் பழைய பாஜக இல்லை என்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு, எஸ்.வி.சேகர் கொந்தளித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதன்படி, ”உண்மைதான். பழைய நேர்மையான ஒழுக்கமான தேசபக்தி உள்ளவர்களாக இருந்தார்கள். இப்போது குண்டர்கள், மக்கள் பணத்தை திருடுபவர்கள், பெண் பித்தர்கள், தேடப்படும் குற்றவாளிகள், மாற்றுக் கட்சி ஸ்லீப்பர் செல்கள், பதவிகளை விற்கும் நிர்வாகிகள் தற்போதைய தலைவரின் கீழ் அணிவகுத்துள்ளனர். வெட்கம்" என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இந்த பதிவை தற்போது  எஸ்.பி.சேகர் நீக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.