அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தகவல் தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டெண்டர் முறைகேடு வழக்கில் வழக்கு விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அளிக்க வேண்டும் என்றும், டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு துறையினர் 59 இடங்களில் சோதனை நடத்தினர். 3928 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ். பி. வேலுமணி வீட்டில் 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் வராத 84 இலட்சம் ரூபாய் பணம், கைப்பேசி, வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிரிப்டோ கரன்சிகளில் 34 இலட்சம் ரூபாய் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சென்னை மாநகராட்சியில் 114 கோடி மதிப்பு ஒப்பந்த பணியில் 29 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தவறான வழியிலும், சட்டத்திற்கு புறம்பாகவும் எஸ். பி. வேலுமணி செயல்பட்டதாகவும், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த அந்த மனுவில், எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்