CM Stalin: சரியான நேரத்தில் தலையிட்ட அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். 


அமைச்சரானார் பொன்முடி:


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றி, சென்னை ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். 


”ஜனநாயகத்தை காத்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி”


இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதவிட்டிருக்கிறார். அதில், ”அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், ஜனநாயகம், அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை உயர்த்தி பிடித்துள்ளது. ஜனநாயகத்தையும் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் சிதைப்பதையும் இந்திய மக்கள் கண்டு வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக போடுவதையும் பார்த்து வருகின்றனர்.


பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளையும் கைவிட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர்.  நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் காப்பதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது 2024 நாடாளுமன்ற தேர்தல். பாசிச சக்திகளின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுத்த நிறுத்த பாடுபடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.  


பொன்முடி பதவியை இழந்தது ஏன்?


கடந்த 2021ம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும், அக்கட்சியின் மூத்த தலைவரான பொன்முடி உயர்கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்கு சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு இறுதியில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவிகள் பறிக்கப்பட்டன. 


சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடினார். விசாரணையின் அடிப்படையில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என, ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.


ஆனால், ”தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பொன்முடி குற்றவாளி இல்லை என கூறவில்லை. எனவே அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது” என பதில் அளித்தார்.  இதையடுத்து, பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஆளுநரை கடுமையாக சாடியது. இந்நிலையில் தான், பொன்முடிக்கு ஆளுநர் ரவி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.