Sun TV Shares Down: மாறன் சகோதரர்கள் இடையே பங்கு உரிமை பிரச்னை; அதிரடியாக குறைந்த சன் டிவி பங்குகள்
சன் டிவி குழுமத்தின் உயர்மட்டத்தில் பிரச்னை வெடித்துள்ளதால், சன் டிவி-யின் பங்குகள் இன்று பெரும் சரிவை சந்தித்துள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் வகிக்கும் பங்கு தொடர்பாக, மாறன் சகோதரர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்புவதாக தயாநிதி மாறன் தெரிவித்ததையடுத்து, பொதுவெளியில் இப்பிரச்னை வெடித்ததால், சன் டிவி-யின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
சன் குழும சாம்ராஜ்ஜியம்
1993-ல் முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட சன் டிவி குழுமம், இன்று தென்னிந்தியாவில் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது. முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறனின் தலைமையில், இன்று 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய குழுமமாக சன் குழுமம் உயர்ந்துள்ளது.
இந்த குழுமம் சார்பாக தற்போது 33 டிவி சேனல்கள், 48 எஃப்.எம் ரேடியோக்கள், 3 நாளிதழ்கள், ஐபிஎல் அணி உள்ளிட்டவைகள் உள்ளன. இதன் வர்த்தகங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை கொண்டது. தற்போது இந்த குழுமத்தின் உயர்மட்டத்தில் பிரச்னை வெடித்துள்ளதால் பங்குகள் சரிந்துள்ளன.
பங்குச் சந்தையில் எதிரொலித்த பிரச்னை
மாறன் சகோதரர்களின் பிரச்னை பொதுவெளிக்கு வந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் சன் டிவி பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. இன்று காலை வர்த்தகத்தில 5 சதவீதம் வரை பங்குகள் சரிந்த நிலையில், 12 மணி அளவில் 3.59 சதவீதம் சரிந்து, 591.50 ரூபாயாக உள்ளது. இன்றைய காலை வர்த்தகத்தில், இந்த பங்குகள் 580 ரூபாய் வரையில் சரிந்தன.
மாறன் சகோதரர்கள் இடையே என்ன பிரச்னை.?
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பம் மற்றும் அவரது சகோதரி மகன் முரசொலி மாறன் குடும்பம் இணைந்து, சன் டிவி குழுமம் தொடங்கப்பட்டது. தற்போது சன் டிவி குழுமத்தை கலாநிதி மாறன் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், கலாநிதி மாறன், கடந்த 2003-ல் 12 லட்சம் பங்குகளை, அதாவது 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை முறைகேடாக கைப்பற்றியதாக குற்றம்சாட்டி, தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால், கலாநிதி மாறன் 5,926 கோடி ரூபாய் ஈவுத்தொகை மற்றும், 2004-ல் 455 கோடி ரூபாய் பெற்றதாகவும், அந்த வருவாயை பயன்படுத்தி, சன் டைரக்ட், சன் பிக்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணி உள்ளிட்டவற்றை வாங்கியதாகவும் தயாநிதி மாறன்ம் குற்றம்சாட்டியுள்ளார்.
சன் டிவி குழுமத்தில், கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் சம பங்கு இருப்பு இருக்க வேண்டும். கடந்த 2003-ம் ஆண்டு வரை அப்படித்தான் இருந்துள்ளது. இந்நிலையில், முரசொலி மாறன் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது, சந்தை விலையை விட மிகவும் குறைவாக, ஒரு பங்கின் விலை 10 ரூபாய் என்ற வீதத்தில், 12 லட்சம் பங்குகளை நிர்வாகக் குழுவின் ஒப்புதல் இல்லாமல், கலாநிதி மாறன் தனது பெரக்கு மாற்றிய பிறகு, அவரது கட்டுப்பாட்டில் 60 சதவீத பங்கு இருப்பு வந்தது. அதே சமயத்தில், மற்ற பங்குதாரர்களின் பங்கு இருப்பு 20 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்துள்ளது.
இதையடுத்து, சன் டிவி குழுமத்தில், கடந்த 2003-ம் ஆண்டுக்கு முந்தைய பங்கு அமைப்பை மீட்க வேண்டும் என தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அப்படி செய்யாவிட்டல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் இடையேயான மோதல் பொதுவெளிக்கு வந்து பரபரப்பை கிளப்பியுள்ளதோடு, பங்குச் சந்தையிலும் சன் டிவியின் பங்குகளில் எதிரொலித்துள்ளது. கலாநிதி மாறன் தற்போது சன் டிவி குழுமத்தில் 75 சதவீத பங்குகளை தன் வசம் வைத்துள்ளார். இந்திய பணக்காரர்களில் ஒருவரான அவரது சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





















