கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி வரை செல்லும் 2 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

வந்தாச்சு கோடை விடுமுறை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்கள் கோடை விடுமுறை காலமாகும். இந்த காலக்கட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் பலரும் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு, வழிபாட்டு தலங்களுக்கு, சுற்றுலா இடங்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இதனால் ரயில்கள், தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் மக்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில்களைப் பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்ற நிலையில் மே 31ம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் அனைத்தும் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் முடிவடைந்து விட்டது. 

அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள்

இதனால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஏற்கனவே பண்டிகை காலம் உள்ளிட்ட முக்கியமான நேரங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி - சென்னை எழும்பூர், திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இது நெல்லையில் இருந்து ஏப்ரல் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், சென்னையில் இருந்து ஏப்ரல் 17, 24 மற்றும் மே 01 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் நெல்லையில் இருந்து ஏப்ரல் 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இயக்கப்பட்டு வருகிறது.

சேவையை நீட்டித்த தெற்கு ரயில்வே

இந்த நிலையில் ரயில் எண் 06069 கொண்ட சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ரயிலானது மே 8ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும், 06070 எண் கொண்ட திருநெல்வேலி முதல் சென்னை எழும்பூர் வரை இயக்கக்கூடிய ரயில் மே 7 முதல் ஜூன் 11 வரை ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையும் இயக்கப்படுகிறது. அதேசமயம் 06166 என்ற எண் கொண்ட திருநெல்வேலி - தாம்பரம் ரயில் மே 3 முதல் ஜூன் 7 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படும் எனவும், தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமைதோறும் மே 4 முதல் ஜூன் 8 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி  இடையே இயக்கப்படும் ரயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்கும். 

தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி,புதுக்கோட்டை, திருச்சி,  ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நிற்கும். இந்த ரயில்களுக்கான முன்பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது.